'கெவின் எப்படி துடிச்சு இருப்பான்'...கொடுரமாக கொல்லப்பட்ட இளைஞர்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தையே அதிர செய்த கொலை வழக்கில் தற்போது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கெவின் ஜோசப். பட்டியலினத்தைச் சேர்ந்தவரான இவருக்கும், கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த நீனு என்ற பெண்ணிற்கும் காதல் மலர்ந்தது. நீனு வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு நீனு குடும்பத்தினரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். இதையடுத்து குடும்பத்தினரை எதிர்ப்பை மீறி, நீனுவும், கெவினும் கடந்த ஆண்டு மே மாதம் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இதனிடையே திருமணத்தால் ஆத்திரமடைந்த நீனுவின் குடும்பத்தினர் கெவினின் வீட்டை அடித்து நொறுக்கினார்கள். மேலும் கெவினையும் அவரது நண்பரான அனீஷையும் கடத்திச் சென்றனர். அனீஷை கடுமையாகத் தாக்கி கும்பல் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றது. கடத்தப்பட்ட கெவின், மறுநாள் கொல்லம் அருகேயுள்ள ஓடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே அதிர செய்தது.
இதையடுத்து கெவின் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, காவல்துறையினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நீனுவின் சகோதரருக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவரது தந்தை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பில் தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரும் ஆயுள் தண்டனையை ஏக காலத்துக்கு அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு குற்றவாளியும் ரூ.40 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அபராதத்தொகையில் இருந்து நீனுவுக்கும், கெவினின் அப்பாவுக்கும் தலா ரூ.1.5 லட்சம் வழங்க வேண்டும். அதேபோல் கெவினின் நண்பரான அனீஷுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.