‘சார் என்ன காப்பாத்துங்க’.. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ‘போன்கால்’.. சாமி கும்பிடபோன இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்ணை மீட்ட இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வைரம்கோடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதைப் பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். இரவு நேரத்தில் திருவிழாவைக் காண்பதற்காக வந்த இளம்பெண் ஒருவர் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் 4 அடி ஆழத்திற்கு மட்டும் தண்ணீர் இருந்ததால் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இருட்டில் கிணற்றுக்குள் தத்தளித்த இளம்பெண் உடனே தனது செல்போன் மூலம் காவல் நிலையத்துக்கு போன் செய்து, தான் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடுவதாக கூறி கதறி அழுதுள்ளார். உடனே இன்ஸ்பெக்டர் ஜலீல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனை அடுத்து தீயணைப்புத்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சுமார் 2 மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் யாரும் கிணற்றுக்குள் இறங்க பயந்தனர். இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் ஜலீல் கயிறு கட்டி கிண்ற்றுக்குள் இறங்கினார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் இளம்பெண்ணை கிணற்றில் மீட்டு வெளியே கொண்டு வந்தார். இன்ஸ்பெக்டர் ஜலீலின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.