'பசு'வோட சிறுநீரை குடிச்சேன்'...'புற்று நோய்' குணமாயிடுச்சு...'பசுவை' தடவுங்க...இதுவும் குணமாகும்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாட்டு சிறுநீர் தன் மார்பக புற்றுநோயை குணப்படுத்தியதாகவும் மேலும் பசுவை தடவி கொடுப்பதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைப்பதாகவும் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் போபால் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் சாத்வி பிரக்யா,தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.இதனிடையே பல்வேறு விஷங்கள் குறித்து பேசிய அவர்,மாடுகள் குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார்.இதுகுறித்து பேசிய சாத்வி பிரக்யா,'மாடுகள் பல இடங்களில் நடத்தப்படும் விதம் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. உண்மையில் மாடுகள் மற்றும் மாடுகள் சார்ந்த தயாரிப்புகளில் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் உள்ளன. அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மாட்டின் சிறுநீரை அருந்தியதின் மூலம் என் மார்பக புற்றுநோய் குணமாகியது.
நான் பல நாட்களாக புற்று நோயினால் அவதிப்பட்டு வந்தேன்.இதனையடுத்து பசு மாட்டின் சிறுநீரை தொடர்ந்து அருந்தியத்தின் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன்.மேலும் மாடுகள் மனிதனின் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.மாட்டின் பின்புறத்திலிருந்து அதன் முன்புறம் வரை நீங்கள்தடவி கொடுத்தால் உங்களுக்கே ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்.
மாடுகளும் மிகுந்த மகிழ்ச்சியினை உணரும்.அதே போன்று விலங்குகளின் கழுத்திலிருந்து பின்பக்கம் வரை, தேய்த்து கொடுத்தால் அவைகள் சிறிது சஞ்சலமடையும்.எனவே மாட்டின் பின்புறத்திலிருந்து கழுத்து வரை தடவி கொடுக்கும்போது, நமக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அது நிச்சயம் கட்டுக்குள் வரும்' என கூறியுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய சாத்வி பிரக்யா,மும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஹேமந்த் கார்கரேயால் கைது செய்யப்பட்டவர்.தற்போது ஜாமினில் உள்ள இவர்,போபால் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.