மருத்துவமனை கட்டி மக்களுக்கு 'சேவை' புரிந்த மருத்துவர்... இறந்தபின் 'புதைக்க' இடம் கிடைக்காமல்... '36 மணி' நேரம் தவித்த அவலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மருத்துவமனை கட்டி மக்களுக்கு மருத்துவம் அளித்த மருத்துவர் இறந்தபின், புதைக்க இடமில்லாமல் 36 மணி நேரம் தவித்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மருத்துவமனை கட்டி மக்களுக்கு 'சேவை' புரிந்த மருத்துவர்... இறந்தபின் 'புதைக்க' இடம் கிடைக்காமல்... '36 மணி' நேரம் தவித்த அவலம்!

உலக மக்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இரவு-பகல் பாராது மருத்துவர்கள் தங்களது உயிரை துச்சமென மதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதில் சிலர் கொரோனாவுக்கு பலியாகும் துயரமும் நடக்கிறது. ஆனால் அவ்வாறு இறக்கும் மருத்துவர்களுக்கு அவர்கள் இறந்தபின் கிடைக்கும் மரியாதை நெஞ்சை கனக்க செய்கிறது.

முன்னதாக தமிழ்நாட்டில் கொரோனாவால் இறந்த மருத்துவரை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் அதேபோல ஒரு சம்பவம் தற்போது மேகாலயாவில் நடைபெற்று இருக்கிறது. மேகாலயா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஜான்.எல்.சைலோ(69). மிகச்சிறந்த மருத்துவர்களில் ஒருவராக அறியப்பட்ட ஜான் மேகாலயா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.

ஷில்லாங்கில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான பெத்தானி மருத்துவமனையை நிறுவி மக்களுக்கு சேவை புரிந்த ஜான் பல்வேறு சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். கொரோனாவுக்கு தன்னுடைய மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த ஜான் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை இறந்தார். இதையடுத்து அவரது உடலை ஷில்லாங்கில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு திரண்ட மக்கள் அவரை அங்கு தகனம் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து டாக்டரின் குடும்பத்தினர் ரிபோய் மாவட்டத்தில் நான்ஹோப் என்ற நகரில் தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்து உடலை அங்கு எடுத்துச் சென்றனர். அங்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரின் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை உருவானது. (இதே நான்ஹோப் கிராமத்தில் மருத்துவமனை தொடங்கி அந்தக் கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கியவர் ஜான் என்பது குறிப்பிடத்தக்கது)

இதனால் மீண்டும் ஷில்லாங்கில் உள்ள அவரது சொந்த மருத்துவமனைக்கே உடல் எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஷில்லாங்கில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மருத்துவரின் உடலை புதைப்பதற்கு அரசு அதிகாரிகள் அனுமதி கேட்டனர். கிறிஸ்தவ ஆலயம் அனுமதி அளித்ததை தொடர்ந்து மருத்துவர் ஜானின் உடல் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இறந்து 36 மணி நேரம் கழித்து புதைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மேகாலயா மருத்துவர் கன்ராட் சங்கமா தனது ட்விட்டர் பக்கத்தில் , ''கருணை என்பது மட்டுமே காலத்தின் தேவை. டாக்டரின் உடலைப் புதைக்க அனுமதியளித்த ஆலய நிர்வாகத்துக்கு நன்றி. மருத்துவர் அமைதியாக துயில் கொள்ளட்டும்,'' என கருத்து தெரிவித்துள்ளார்.