'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் புலம்பெயர்ந்து பணிபுரிந்து வந்த தொழிலாளர்களை அமர வைத்து அவர்கள் மீது கிருமி நாசினி தெளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'

கொரொனோ தொற்று காரணமாக இந்தியா முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர்ந்து பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசித்து வந்த வீடுகளை அவர்களது வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய சொல்வதால் இருக்க இடமின்றி அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றனர். வேலையிழப்பால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவல நிலை நிலவுகிறது.

மாநிலங்களுக்கு இடையே எல்லைகள் மூடப்பட்டு விட்டதால், பலரும் வெளியேற முடியாமல் எல்லையில் சிக்கிக் கொண்டுள்ளனர். இவர்களை அந்தந்த மாநில அரசுகளே கண்காணித்து இருப்பிடம் அளித்து வருகின்றன.

இந்தநிலையில், வெளி மாநிலங்களில் கூலித் தொழிலாளர்களாக குடும்பத்துடன் பணியாற்றிவிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலிக்கு வந்தவர்களை, கீழே அமர வைத்து தண்ணீர் குழாய் மூலம் கிருமி நாசினியை பீய்ச்சி அடித்துள்ளனர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல்  கேரளா மாநிலத்தின் கர்நாடக எல்லையான வயநாடு பகுதி வழியாக கேரளாவுக்குள் நுழைந்தவர்களை எல்லையிலேயே நிறுத்தி தீயணைப்பு வீரர்கள், சுவரில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு அவர்கள் மீது கிருமி நாசினியைத் தெளித்தனர். இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

விமான நிலையம் வழியாக வந்த பலரையும் முறையான சோதனையின்றி நாட்டுக்குள் விட்டு விட்டு, கூலித் தொழிலாளர்களை விலங்குகளை போல் நடத்துவது சரியல்ல என சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

CORONA, UTTARPRADESH, ANTISEPTIC, SPRAYED, MIGRANT WORKERS