‘அப்பா இறந்துட்டாரு’!.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் அச்சத்தால் உடல்நிலை சரியில்லாமல் இறந்த ஒருவரின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முன்வராத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘அப்பா இறந்துட்டாரு’!.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகே உள்ள சிறுணாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சோலை (62). இவருக்கு 4 பிள்ளைகள். சோலையின் மனைவியும், மூத்த மகனும் இறந்துவிட்ட நிலையில், 3 மகன்களுடன் சோலை வசித்து வந்துள்ளார். இதில் இரண்டாவது மகன் மனநலம் குன்றியவர் எனக் கூறப்படுகிறது. மற்ற இரண்டு மகன்கள் சிறுவர்கள்.

இந்த நிலையில் செய்யாறில் சோலை வாட்ச்மேனாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மதுப்பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கடந்த 7 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிய சோலைக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. தொடர்ந்து இருமலால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 28ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்பா இறந்துவிட்டதை அறிந்த பிள்ளைகள் கதறியழுதுள்ளனர். பின்னர் அருகில் வசிக்கும் உறவினர்களிடம் அப்பா இறந்துவிட்டார் என அழுதுகொண்டே தெரிவித்துள்ளனர். ஆனால் சோலை கொரோனா நோய் வந்து இறந்திருக்கலாம் என நினைத்த உறவினர்கள் அவரது அருகிலேயே செல்லாமல் இருந்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் சோலையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சோலை நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த ஊருக்கு மீண்டும் போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சோலையின் உறவினர்களிடம் அவர் உயிரிழந்ததற்கான காரணத்தை எடுத்துக் கூறி அடக்கம் செய்ய போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் உறவினர்களும், ஊர் மக்களும் அடக்கம் செய்ய முன்வரவில்லை. அதனால் போலீசாரே தங்களது செலவில் சோலையின் உடலை நல்லடம் செய்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த கஞ்சனூர் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், ‘இறந்துபோன சோலை மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் செய்யாறில் வாட்ச்மேன் வேலை பார்த்துதான் தன் மகன்களை வளர்த்து வந்துள்ளார். அவருக்கு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. 7 மாசமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு இருமிக்கொண்டே இருந்துள்ளார்.

அதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என நினைத்து உதவி செய்ய யாரும் செல்லவில்லை. அவர் இறந்த பிறகும் கூட அருகில் செல்ல பயந்தனர். சோலையின் மகன்களில் இருவர் சிறுவர்கள். மற்றொருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர்களால் என்ன செய்ய முடியும். ரத்தமும் சதையுமாக நம்முடன் வாழ்ந்த ஒருவரை அப்படியே விட்டுவிட்டு வருவோமா., அதனால் நானும் எஸ்.ஐ நரசிம்ம ஜோதி மற்றும் சுகாதார அதிகாரி ஆகியோர் சேர்ந்து எங்களிடம் இருந்த பணத்தைப் போட்டு சோலையின் உடலை நல்லடக்கம் செய்தோம்’ என தெரிவித்துள்ளார்.

News Credits: Vikatan

CORONA, CORONAVIRUS, TAMILNADUPOLICE, VILLUPURAM, DEADBODY