பேரிடர் மேலாண்மை தொடர்பான ஐநா பொதுக்கூட்டம் வருகிற மே 13 ஆம் முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில், 140 நாடுகளை சேர்ந்த 3000 ஐநா பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் மணிப்பூரை சேர்ந்த 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி லிஸிப்ரியா கஞ்சுஜம் பங்கேற்று உரையாற்றாயிருக்கிறார்.
பேரிடர் மேலாண்மை தொடர்பான ஐநா பொதுக்கூட்டத்தில் பங்குபெறுபவர்களில் இவரே மிக குறைந்த வயது உடைய பிரதிநிதி. இந்நிலையில் இவர் இந்திய நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு பேரிடர் மேலாண்மை குறித்த ஆசிய மாநாட்டில் பங்குபெற்றுள்ளார்.
இந்நிலையில் சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற சம்பவங்களை தொலைக்காட்சியில் பார்க்கும்போது அதனால் பாதிப்படைந்தவர்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்ததாகவும் இதற்காக உலக மக்கள் ஒன்று கூட வேண்டும் என்றும் சிறுமி லிஸிப்ரியா தெரிவித்துள்ளார்.
இளம் வயதிலேயே உலக அரங்கில் உரையாற்றவிருக்கும் இந்த சிறுமிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.