தேர்தல் ஜனநாயக கடமை.. மலேசியாவிலிருந்து தனி விமானம்.. பறந்து வந்து வாக்களித்த பில்லியனர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜனநாயக கடமை ஆற்றுவதற்காக மலேசியாவில் இருந்து தனி விமானத்தில் வந்த பில்லியனருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து துவங்கி 7 கட்டங்களாக, மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் மே மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. நூறு சதவிகித வாக்குப்பதிவு அவசியம் என்று பிரதமர் முதல் பிரபலங்கள், சாதராண மனிதர்கள் வரை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே தேர்தலில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஏ. யூசுப் அலி. பில்லியனர் மற்றும் பிசினஸ்மேனான இவர், துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லூலூ குரூப்பின் சேர்மன் ஆவார். கேரளா, மலேசியா, துபாய் உள்ளிட்ட பகுதிகளில் மால் வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை 3-வது கட்ட வாக்குப்பதிவு கேரளாவில் நடைபெற்றது. வாக்குப்பதிவில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக மலேசியாவிலிருந்து தனது தனி விமானத்தில் கொச்சி வந்த பில்லியனர் யூசுப் அலி, அங்கிருந்து தனது தனி ஹெலிகாப்டர் மூலம் சொந்த ஊரான திருச்சூர் அருகே நாட்டிகாவுக்கு வந்தார். அங்கு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தான் படித்த பள்ளியிலேயே வாக்களித்தார். வாக்களித்த சில மணி நேரங்களில் தனது சொந்த விமானத்திலேயே அபுதாபிக்குச் சென்றார். இவர் இப்படி வாக்களிப்பது இரண்டாவது முறையாகும்.
தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக தனி விமானத்தில் வந்து சென்ற யூசுப் அலியைக் கேரள மக்கள் பாராட்டி வருகின்றனர். யூசுப் அலி இப்படிச் சொந்த விமானத்தில் கேரளா வருவது முதல்முறையல்ல. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போதும் தன்னுடைய ஹெலிகாப்டரில் சென்று வெள்ளச் சேதங்களை பார்வையிட்டதுடன், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 18 கோடி ரூபாய் அளித்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.