'ஊரடங்கு' உத்தரவை அமல்படுத்திய... போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 42 பேர் கைது!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவை அமல்படுத்த சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய 42 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றும் நபர்களுக்கு எதிராக போலீசார் பல்வேறு நூதன தண்டனைகளை அமல்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கை அமல்படுத்த சென்ற போலீசார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள இஷாத் நகரின் காரம்பூர் சவுத்ரி பகுதியில் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்த ஐபிஎஸ் அதிகாரி வர்மா தலைமையில் போலீசார் சென்றனர். வெளியில் நடமாடிக்கொண்டு இருந்த மக்களை போலீசார் கண்டித்து இருக்கின்றனர்.
இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட அப்பகுதி மக்கள் போலீசாரை தாக்கி இருக்கின்றனர். இதில் காயமடைந்த ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட ஒருசில போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதையடுத்து தாக்குதல் நடத்திய சுமார் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 42 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.