'தெலுங்கானா' டூ சொந்த 'ஊர்'... நடந்தே வந்த '12 வயது' சிறுமி... வீட்டை நெருங்குகையில் நடந்த... 'துயர' சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜமாலோ மாட்கம் என்ற 12 வயது சிறுமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தனது உறவினர்களுடன் கிளம்பி தெலுங்கானாவிலுள்ள மிளகு பண்ணை ஒன்றில் பணிபுரிய சென்றுள்ளார்.
ஏப்ரல் மாதம் 14 - ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் கட்டிற்குள் வராத காரணத்தால் நாடு முழுவதும் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. வேறு மாநிலங்களில் தொழில் செய்து வந்த பலர், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் சாப்பாட்டிற்கு வழியில்லாத காரணத்தால் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானாவில் இருந்து ஜமாலோ மாட்கம் உட்பட 13 பேர் நடந்தே செல்ல ஊர் செல்ல தீர்மானித்து கடந்த 16 ஆம் தேதி தெலுங்கானாவில் இருந்து கிளம்பியுள்ளனர். மூன்று நாட்களுக்கு பின்னர் சுமார் நூறு கிலோமீட்டர் கடந்த நிலையில் தனது வீட்டிற்கு செல்ல 11 கிலோமீட்டர் இருக்கும் நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.உடன் வந்தவர்களிடம் ஒருவரிடம் மட்டுமே தொலைபேசி இருந்தது. அதிலும் பேட்டரி இல்லாமல் போக தாமதமாகவே சிறுமியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்து வந்ததால் ஏற்பட்ட சோர்வு மற்றும் எலெக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு (electrolyte imbalance) காரணமாக சிறுமி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. வேறு மாநிலத்தில் இருந்து வந்ததால் சிறுமியின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அச்சிறுமியின் உடல் பெற்றோர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் கூறுகையில், 'எங்களுக்கு அவள் ஒரே மகள் தான். அவளின் வாழ்நாளில் எங்களை விட்டு முதன் முறையாக பிரிந்து வேறு இடத்திற்கு சென்றிருந்தார். கடைசியாக தெலுங்கானாவில் இருந்து கிளம்பும் போது எங்களிடம் அவள் பேசினாள்' என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.