‘கடைய இழுத்து மூட வேண்டியதுதான்’... ‘வேற வழி தெரியல’... ‘பிரபல நிறுவனம் வேதனை’!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கேட்ட உதவி கிடைக்கவில்லை என்றால், வோடபோன்-ஐடியா நிறுவனத்தை, இந்தியாவில் மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என அதன் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.

‘கடைய இழுத்து மூட வேண்டியதுதான்’... ‘வேற வழி தெரியல’... ‘பிரபல நிறுவனம் வேதனை’!

இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் சம்மிட் நிகழ்ச்சியில் பிர்லாவிடம், ‘ஒருவேளை, மத்திய அரசு நீங்கள் கேட்கும் உதவியை செய்யவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பிர்லா, ‘வோடாபோன் ஐடியா வியாபாரத்தை மூடிவிட்டுப் போக வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஏனெனில் இவ்வளவு பெரிய அபராத தொகையை 3 மாதத்தில் கட்டக்கூடிய நிறுவனம் உலகிலேயே இல்லை’ என்று தடாலடியாக பதில் அளித்துள்ளார்.

அதேவேளையில், தற்போது இருக்கும் நிலைமையை, மத்திய அரசு சரிசெய்ய முயற்சிக்கும் என பிர்லா, நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏனெனில், மத்திய அரசுக்கு, டெலிகாம் துறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரியும் என்றும், மொத்த டிஜிட்டல் இந்தியா திட்டமும் இதைச் சார்ந்துதான் இயங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம், இந்திய தொலை தொடர்புத் துறையில் நுழைந்து பல அதிரடி தள்ளுபடிகளை அறிவித்தது. இதனால், ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய பிரபல நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தக்கவைப்பதில் திக்குமுக்காடி போயின. இதையடுத்து போட்டியை சமாளிக்க, ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து கட்டணத்தை உயர்த்தின. அப்போதும், கடன் சுமையால் அந்த நிறுவனம் தத்தளித்தது.

இந்நிலையில் தான், ஏர்டெல், வோடாபோன், ஐடியா மற்றும் பிற நிறுவனங்கள், கடந்த 14 ஆண்டுகளாக செலுத்தாத உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை செலுத்த உத்தரவிட்டது மத்திய அரசு. நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மொத்தக் கட்டணம், சுமார் 1.47 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில், வோடபோன்-ஐடியா நிறுவனம் மட்டுமே, 53 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த நிறுவனங்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர, அதற்குண்டான நிலுவைத் தொகைக்கான வட்டி, அபராதம் ஆகியவற்றை உடனடியாக தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வந்தன. இந்த கோரிக்கையை ஏற்று, குறிப்பிட அளவில் மத்திய அரசு நிதி நிவாரணம் வழங்காவிட்டால், நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என பிர்லா தெரிவித்திருக்கிறார்.

VODAFONE, SHUT, CLOSE