‘வாடகை பைக் சேவை’... 'ஓலா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு’!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

ஓலா நிறுவனம் தனது வாடகை பைக் சேவையை, இந்தியாவின் மேலும் பல நகரங்களில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

‘வாடகை பைக் சேவை’... 'ஓலா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு’!

அடுத்த 12 மாதங்களில் மூன்று மடங்கு அதிக வளர்ச்சியைப் பெற வேண்டும் என்பதை, குறிக்கோளாக கருத்தில்கொண்டு, ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.  இந்தியாவில், அதிகளவில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுவரும் ஓலா நிறுவனம், தொடர்ந்து தனது வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள, ஓலா பைக் சேவையை, ஐதராபாத் உள்ளிட்ட 150 நகரங்களில், விரிவாக்கம் செய்வதாகக் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நிலவும் நெருக்கடியான போக்குவரத்தில், இரு சக்கர வாகனமான பைக்கின் சேவை மிகவும் அத்தியாவசியமாகக் கருதப்படுகிறது. இதனால் நிச்சயம் வாடகை பைக் சேவை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் ஓலா நிறுவனம் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து ஓலா விற்பனைப் பிரிவுத் தலைவர் அருண் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘இந்தியாவில் மக்களின் போக்குவரத்துத் தேவையை சிறந்த முறையில் பூர்த்தி செய்து வருவதாக நம்புகிறோம்.

இது சிறிய நகரத்திலிருந்து பெரும் மெட்ரோ நகரங்கள் வரையில் சிறந்த சேவையாக இருக்கும். பயணிகளுக்கு மட்டுமல்லாது பல லட்சம் இளைஞர்களுக்கு, இது ஒரு நல்ல வேலை வாய்ப்பாகவும் அமையும். இதற்காக முதற்கட்டமாக 3 லட்சம் பேருடன் களம் இறங்க உள்ளோம்’ என்றார். ஓலா பைக் சேவை முதன்முதலாக குர்கான், ஃபரிதாபாத் மற்றும் ஜெய்பூர் ஆகிய மூன்று நகரங்களில் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் ஓலா நிறுவனத்தின் கீழ் 2 மில்லியன் ஓட்டுநர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

OLA, RENT, BIKE