‘ரிப்பேருக்கு வந்த போலீஸ் ஜீப்பில் ‘சிங்கம்’ பட பில்டப்’.. டிக்டாக் வீடியோவால் பிடிபட்ட இளைஞர்கள்!
Home > தமிழ் newsகாவல்துறை வாகனத்தை பயன்படுத்தி டிக் டாக் வீடியோ எடுத்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள ஒரு மெக்கானிக் ஷாப்பிற்கு ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர், பழுதாகியிருந்த போலீஸ் ஜீப்பை சரிசெய்வதற்காக விட்டுச் சென்றுள்ளார். போலீஸ் ஜீப்பை பார்த்த மெக்கானிக் சந்தோஷ்குமாருக்கும் அவரது நண்பரான சபரிநாதனுக்கும் ஒரு எண்ணம் வந்துள்ளது.
உடனே தங்களது செல்போனில், டிக் டாக் செயலி மூலம் சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா வருவதுபோல இருவரும் போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கி தவசி படத்தில் வரும் ஒரு பாடலின் பின்னணியில் ஓடவிட்டு நடந்துவருவதை வீடியோ எடுத்து, சில நாள்களுக்கு முன்பு டிக் டாக் செயலியில் பதிவிட்டுள்ளனர்.
இவர்களது வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்ததையடுத்து, இந்த வீடியோவைப் பார்த்த ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் அதிர்ச்சியாகியுள்ளார். உடனே போலீஸ் ஜீப்பை வைத்து வீடியோ எடுத்த மெக்கானிக் சந்தோஷ்குமாரையும் அவரது நண்பர் சபரிநாதனையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சிலநாள்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை கேலி செய்வதுபோல் வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவேற்றியதை அடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.