'பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் இலவச WiFi தரும் மெஷின்’.. அசத்தும் மாநகராட்சி!
Home > தமிழ் newsதமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய தமிழகத்தின் இந்த அரசாணை வந்ததோடு, அதுகுறித்த விழிப்புணர்வும் பலரிடையே வந்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்தால் இலவச Wi-Fi தரும் புதுமையான இயந்திரத்தை சேலம் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது சேலத்தைப் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள அம்மாவட்ட நிர்வாகம் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.
அதன் முதல்கட்டமாக பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, கலை நிகழ்ச்சிகளின் மூலம் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலேயே முதல் முறையாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்தால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுக்கும் புதிய இயந்திரத்தை வைத்து அம்மாவட்ட நிர்வாகம் அசத்தியுள்ளது.
இந்த இயந்திரத்தினுள் 250 மி.லி முதல் 2.25 லிட்டர் வரையிலான காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போடும்போது அவை மறுசுழற்சிக்கு அரைக்கப்பட்டு இயந்திரத்தில் சேகரிக்கப்படுகிறது. காலியான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக ஐந்து நிமிடம் இலவசமாக செல்போனில் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும், ஐந்து நிமிட இலவச Wi-Fi மற்றும் 250 மிலி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரும் வசதியும் கொண்டு, இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தியவுடன் பயணிகள் ஆர்வமாக பயன்படுத்த தொடங்கியுள்ளதாகவும், பின்வரும் காலங்களில் இந்த திட்டம் சேலம் மாநகராட்சி முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் சேலம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.