‘நாம்தான் பிரபலப்படுத்த வேண்டும்’.. பால்வாடி பள்ளிக்கு மகளை அனுப்பும் மாவட்ட ஆட்சியர்!
Home > தமிழ் newsநெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தனது பெண் குழந்தையை அங்கன் வாடி பள்ளியில் சேர்த்திருக்கும் விஷயம் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இருக்கும் நர்சரி படிப்புகளைப் போலவேதான், அரசு நடத்தும் பிரி-ஸ்கூல், அங்கன்வாடி பள்ளி என்றழைக்கப்படுகிறது. குழந்தைகளின் சரிவிகித உணவு, மாதாந்திர வளர்ச்சி, எடை எல்லாவற்றையும் முறையாக சர்வே மூலம் (தற்போது ஸ்மார்ட் போன்களின் மூலமும்) பதிவு செய்து கண்காணித்து வருவதே இந்த பள்ளிகளின் முக்கிய நோக்கம்.
தவிர குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் பலவகைத் திறன் மேம்பாட்டு பயிற்சி, அடிப்படை பண்புகளை கற்றலின் வழியில் அறிமுகப்படுத்தும் இத்தகைய அங்கன்வாடி பள்ளியில் மதிய உணவு, இணை உணவு, முட்டை உள்ளிட்டவை சத்துணவாக வழங்கப்படுகின்றன.
ஆனால் ஆங்கில மழலைப் பள்ளிகளின் மீதான மோகத்தால் பலரும் இத்தகைய பள்ளிகளை புறக்கணிக்கின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியரான ஷில்பா பிரபாகர் (2009-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர்) தன் மகளை அங்கன்வாடி பள்ளிக்கு அனுப்புகிறார்.
மேலும் ‘அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு மழலைப் பள்ளிகளுக்கு அனுப்பினால்தான் மக்கள் மத்தியில் இந்த பள்ளிகள் பிரபலமாகும், அவர்களும் தங்கள் குழந்தைகளை இதுபோன்ற பள்ளிகளுக்கு அனுப்புவார்கள்’ என்று ஆட்சியர் ஷில்பா பிரபாகர் கூறியுள்ளார்.