எங்களையும் அனாதையாக்கி சென்றுவிட்டாயே !
Home > தமிழ் newsஓய்வின்றி ஓயாமல் ஓடிய சூரியன் தற்போது ஓய்வெடுக்க சென்று விட்டது. தான் வாழ்நாளில் ஓய்வென்பதே என்னவென்று தெரியாமல் உழைத்துகொண்டிருந்தவர் கலைஞர் அவர்கள். உழைப்பிற்கும் வயதிற்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு கலைஞர். தன்னுடைய உடலையும் மனதையும் கட்டுப்படுத்தினால் ஒருவன் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்பதற்கு கலைஞர் மிகப்பெரிய உதாரணம்.
ஆம் ! அந்த கட்டுப்பாடுகளை மிக கடுமையாக கடைப்பிடித்தவர் கலைஞர்.காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி,யோகா என அந்த நாளை மிகவும் புத்துணர்ச்சியோடு ஆரம்பிப்பார்.எந்த ஊருக்கு சென்றாலும் எத்தனை கூட்டங்களில் பேசினாலும் அந்த புத்துணர்ச்சியானது சிறிதும் குறைவதில்லை. வாய்க்கு சாப்பிடாமல் வயிற்றுக்கு சாப்பிட்டு உணவிலும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தவர்.
தன்னை என்றுமே ஒரு ஆசான் என்று நினைக்காமல் மாணவன் என்று நினைத்ததாலோ என்னவோ நாளும் புதியவைகளை கற்கும் ஆர்வத்தில் ஓடிக்கொண்டே இருந்தவர் கலைஞர்.இந்த ஆர்வமும்,புத்துணர்ச்சியும் இருந்ததாலோ என்னவோ அவரை அவ்வளவு எளிதில் எந்த நோயும் அண்டியது இல்லை,முதுமையை தவிர.
அந்த முதுமையின் காரணமாக அவரது உடல் எடையை அவரது,ஓடி ஓடி தேய்ந்த கால்களால் தாங்க முடியவில்லை.இதனால் அவருக்காக வடிவமைக்கப்பட்ட சர்க்கர நாற்காலியிலும்,அவருக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பெற்ற காரிலுமே தனது அன்றாட பணிகளை கவனித்து வந்தார்.இன்று அந்த ஒப்பற்ற தலைவன் அவைகளுக்கு இறுதியான ஓய்வை கொடுத்துவிட்டு, மீளா துயில்கொள்ள சென்றுவிட்டார்.