’கலைஞர்’..முப்படைகளின் இறுதி மரியாதையுடன், 21 குண்டு முழங்க நல்லடக்கம்!
Home > தமிழ் newsதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் கொண்டுவரப்பட்ட சாலைகளின் வழியே அவரது வாழ்க்கைப் பயணமும் ஒட்டி உறைந்துள்ளதைக் காண முடியும்.
1975ம் ஆண்டு ஜூன் 26ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசரகால திட்டம் எனும் எமர்ஜென்சியைக் கொண்டுவந்தார். அதுசமயம் காமராஜரை கைது செய்ய வந்த உத்தரவினை செயல்படுத்தாமலு, எமர்ஜன்சி திட்டத்துக்கு எதிராகவும் கலைஞர் செயல்படத் தொடங்கியதால், ஜனவரி 31ம் தேதி 1976ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு கலைஞர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் வருத்தமுற்ற காமராஜர் 1975ல் மறைந்தார். அவருக்கு கன்னியாகுமரியில் மண்டபம் அமைத்தார் கலைஞர். அவ்வழியே எடுத்துவரப்பட்ட கலைஞரின் உடல் தந்தை பெரியாரின் சாலையை அடைந்தது.
இதேபோல் தந்தை பெரியாரின் திராவிடக் கொள்கையின் மீது ஈடுபாடுற்றவர் கலைஞர் கருணாநிதி. உலகமெங்கும் மார்க்ஸிசம், கம்யூனிசம் என்று உலக சித்தாந்தங்களை பின் தொடர்ந்தபோது, கலைஞர் மட்டும் தன் படங்களில் தொடர்ந்து திராவிட சிந்தனைகளை தன் திரைப்பட வசனங்களில் வைத்தார். சென்னையில் தந்தை பெரியார் சாலையில் உள்ள பெரியார் சிலையினை திறந்து வைத்தவரும் கலைஞரே. அந்த சாலை வழியே வந்த கலைஞரின் உடல் அண்ணா சதுக்கத்தை அடைந்தது.
1949ல் உருவான திராவிர முன்னேற்ற கழகத்தினை அண்ணாவுக்கு பிறகு இத்தனை ஆண்டுகள் வழிநடத்திய கலைஞர், அண்ணா சதுக்கத்தை அடைந்தார். தரைப்படை, ராணுவப் படை, விமானப்படை என்று முப்படை வீரர்களின் மரியாதையுடன் தேசியக் கொடி போர்த்தப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ந்தது. முப்படை ஜெனரல்களின் மரியாதை வணக்கங்கள் செலுத்தப்பட்டு மலர் வளையங்கள் செலுத்தப்பட்டன.
பல்வேறு முக்கிய தலைவர்களின் மலர்வளைய அஞ்சலிக்கு பிறகு ஆளுநரின் முன்னிலையில், வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன், திமுக தலைவர், 13 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற; 5 முறை முதல்வர் பதவி வகித்த; ‘கலைஞர்’எனும் பட்டத்துக்கு சொந்தக்காரரான கருணாநிதியின் அமர உடல் நல்லடக்கம் செய்யப்படும் முன்னர் அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு அவரது மகன் மு.க.ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது. பின் அவரது உடல், ’ஓய்வெடுக்காமல் உழைத்தவன்; இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழைக்குள் வைக்கப்பட்டது.
இறுதியாக, 1924ம் ஆண்டு, ஜூன் 3ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் பிறந்த, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, நேற்றைய தினமான ஆகஸ்டு 7, 2018 செவ்வாய் கிழமை அன்று மாலை 6.10 மணியளவில் காவேரி மருத்துவமனையில் தனது 94 வயதில் மறைந்தார். இன்று (ஆகஸ்டு 8, 2018, புதன் கிழமை) சென்னை மெரினாவில் உள்ள (கலைஞர் விரும்பிய) அண்ணா சதுக்கத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு அருகே, லட்சோபலட்சம் தொண்டர்களின் அழுகுரல் ஒலிகளுக்கு நடுவே, பிரியாவிடை பெற்று முத்தமிழ் அறிஞர், அமரர். ’கலைஞர்’ கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார்.