கருப்பை இல்லாத பெண்ணுக்கு பிறந்த அழகான குழந்தை..சென்னையில் மருத்துவ அதிசயம்!

Home > தமிழ் news
By |

கருப்பை இல்லாத பெண்ணுக்கு தோல் வழியாக கருமுட்டையை எடுத்து வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற வைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பை இல்லாத பெண்ணுக்கு பிறந்த அழகான குழந்தை..சென்னையில் மருத்துவ அதிசயம்!

இந்தியாவிலேயே கருப்பை இல்லாமல் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது இதுவே முதல் முறை. இந்த சாதனையை மருத்துவர் கமலா செல்வராஜூம் அவரது மகளான மகப்பேறு மருத்துவர் பிரியாவும் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

இதுபற்றி மருத்துவர் கமலா செல்வராஜ் கூறியதாவது, 27 வயதான அப்பெண்ணுக்கு கருப்பையில் கேன்சர் வந்ததால், அதை மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து எடுத்துள்ளனர். ஆனால் கேன்சர் செல்கள் சினைப்பைகளுக்குப் பரவாமல் இருந்ததால், அப்பெண்ணுக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர், சினைப்பைகளை மட்டும் நீக்காமல் அப்படியே விட்டு வைத்திருந்தார். மேலும் வலது கருவளையத்தை ரத்தவோட்டம் பாய்கிற வகையில் தோலுக்கு அடியில் இணைத்திருந்தார்.

இது நடந்து 3 வருடங்களுக்கு பிறகு அப்பெண்ணை பரிசோதித்து பார்த்த போது சினைப்பைகளில் ரத்தவோட்டம் இருந்தது. அதனால் டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை பெற்று கொள்வதற்காக கேரளாவில் இருந்து அப்பெண் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அப்பெண்ணுக்கு என்னுடைய மகள் பிரியாதான் குழந்தை பெறுவதற்கு அதிகபட்சமான ட்ரீட்மென்ட்டை கொடுத்தார்.

அப்பெண்ணின் வயிற்றின், மேல் தோல் வழியாக, அல்ட்ரா சவுண்ட் உதவியுடன் கருமுட்டையை வெளியே எடுத்து, அதை அவருடைய கணவரின் உயிரணுக்களுடன் இணைத்து, டெஸ்ட் டியூபில் வைத்து, கரு உருவானவுடன் அதை வாடகைத்தாயின் கருப்பையில் வைத்தோம், ஆனால் அதில் குழந்தை உருவாகவில்லை, மறுபடியும் இதேபோல் செய்த முயற்சியும் பயனளிக்கவில்லை, மூன்றாவதாக மேற்கொண்ட முயற்சியால் கருவில் குழந்தை நன்றாக வளரத்தொடங்கியது என மருத்துவர் கமலா செல்வராஜ் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை வாடகைத்தாயின் மூலம் அப்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்தியாவிலேயே தோல் வழியாக கருமுட்டையை எடுத்து அதை வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற வைத்தது இதுவே முதல் முறை என மருத்துவர் கமலா செல்வராஜ் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

CHENNAI, BABY, VIRAL