டிஜிபி உட்பட 250 பேரின் மரணத்துக்கு காரணமான நிதிநிறுவனமா? மம்தாவின் தர்மயுத்த பின்னணி!
Home > தமிழ் newsமேற்கு வங்கத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை உண்டாக்கியது.
முதலில் நக்சலைட்டு இயக்கத்தில் இருந்த சங்கராத்தியா சென் என்பவர், பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து வெளிவந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாகவும், அதன் பின்னர் தன் பெயரை சுகிப்தா சென் என்று மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் சுகிப்தா சென்னால். சிறிய முதலீட்டில் 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாரதா சிட்பண்ட் நிறுவனம் பின்னர் திரைப்படம், பத்திரிகை, வியாபாரங்கள் என பல தளங்களில் பல வடக்கத்திய மாநிலங்களிலும் தங்கள் வியாபாரச் சிறகை விரித்தது. இதனிடையே 2008-ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் ரிசப்சனிஸ்ட்டாக சேர்ந்து கொஞ்ச நாளிலேயே இந்நிறுவனத்தின் 100 கிளை நிறுவனங்களை நிர்வகிக்கும் இயக்குநராகவும் சுதிப்தா சென்னுக்கு அடுத்தபடியாக செக் புக்கில் கையெழுத்து போடும் அளவுக்கு வளர்ந்தவர் தெப்ஜனி முகர்ஜி.
இப்படி போய்க்கொண்டிருந்த காலத்தில்தான் மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் ஓவியத்தை 1 கோடியே 80 லட்சம் கொடுத்து சாரதா நிறுவனம் வாங்கியது. அதன் பிறகுதான் சாரதா நிறுவனத்தின் பத்திரிகை மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து அரசு பதிவுபெற்ற நூலகங்களுக்குள்ளும் அனுமதிக்கப்பட்டது.
பின்னர் 17 லட்சம் பேரை ஏமாற்றி ரூ.30 ஆயிரம் கோடியை சாரதா நிறுவனம் சுருட்டியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கொலை செய்யப்பட்டவர்கள், இறந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் என 250 பேர் உள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களுள் ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் பருவாவும் இதில் அடக்கம். காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது கூட இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி குணால் கோஷ் மீது குற்றம் சாட்டி சாரதா நிறுவனம் பின்னாளில் ஒரு வாக்குமூல கடிதத்தை எழுதியது. அதன் பின்னரே இந்த வழக்கு காவல்துறையினரிடம் இருந்து சிபிஐக்கு கை மாறியது.
இந்த சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கில்தான், கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை, முன்னறிவிப்பின்றி விசாரிக்க, தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கு சிபிஐ சென்றதை அடுத்து, போலீஸாரால் சிபிஐ தடுத்து நிறுத்தப்பட்டு ஒருநாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு வெளிவிடப்பட்டனர்.
இதனை அடுத்து, மத்திய அரசின் சதித் திட்டம்தான் இது என்று விமர்சித்த மம்தா பானர்ஜி, கொல்கத்தா ஆணையரை விசாரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரது இல்லத்துக்குச் சென்று பேசிவிட்டு பின்பு அனைத்து காவலர்கள், மேயர் மற்றும் தன் கட்சி பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் 2 நாட்கள் தர்ணாவில் ஈடுபடத் தொடங்கினார். இதற்கு ராகுல்காந்தி, கெஜ்ரிவால், சந்திரபாபுநாயுடு, கனிமொழி உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள சிபிஐ இடைக்கால இயக்குனராக இருந்த நாகேஸ்வர ராவ், ‘சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொல்கத்தா காவல்துறை ஆணையர் சிபிஐக்கு தர மறுக்கிறார். மேலும் அவருக்கு எதிரான ஆவணங்களை அழித்துவிட்டார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அவரை விசாரிக்க அவர் ஒத்துழைப்பு தருவதற்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும், நீதிமன்றம் விசாரித்து வரும் இவ்வழக்கில் ஒத்துழைப்பு தராத காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
சிபிஐ தாக்கல் செய்த, இம்மனுவை இன்று (பிப்ரவரி 05) விசாரிப்பதாகக் கூறிய உச்சநீதிமன்றம், காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் சிட்பண்ட் நிறுவனத்துக்கும் தனக்கும் எதிரான ஆவணங்களை அழித்ததற்கான ஆவணங்களை கொண்டுவந்தால், நிச்சயம் அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே சிபிஐ இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நேற்று (பிப்ரவரி 04) பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்நிலையில் அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் உரிமைப் போராட்டமாக சிபிஐ இவ்வழக்கை விசாரிப்பதற்கு, காவலர்களை விசாரிப்பதற்கும் எதிராக மம்தாவின் தர்ணா போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில், சாரதா சிட்பண்ட் முறைகேட்டில் மூத்த காவல் அதிகாரிகள், மூத்த அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஆதாரங்களை சிபிஐ நடத்திய விசாரணையில் ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக பிரமாணப்பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் அளித்த மம்தா, காவல்துறையினரை, சிபிஐ விசாரிக்க தான் தடையாக இல்லை என்றும், சிபிஐ-யினை வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதையே, தான் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.