"எதை செய்தாலும் இதயபூர்வமாக செய்":ஐ.பி.எஸ் மகனுக்கு சல்யூட் அடித்த கான்ஸ்டபிள் தந்தை...நெகிழ்ச்சியான சம்பவம்!
Home > தமிழ் newsசில நேரங்களில் சினிமாவில் நடப்பதை போன்றே,நிஜ வாழ்விலும் சில சம்பவங்கள் நடந்து விடும்.அதே போல் ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
லக்னோவைச் சேர்ந்தவர் ஜனார்தன் சிங்.இவர் லக்னோவில் உள்ள விபூதி காந்த் காவல் நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.இவரின் மகன் அனூப் குமார். இவர் 2014-ம் ஆண்டு மத்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று,ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார்.பயிற்சிக்கு பின்,மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தனது பணியை தொடர்ந்தார்.
இந்நிலையில் இடமாறுதலில் நேற்று முன்தினம் லக்னோ வடக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி) அனூப் குமார் நியமிக்கப்பட்டார். அவருடைய அதிகார எல்லைக்குள் தான் அனூப் குமாரின் தந்தை கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும்,விபூதி காந்த் காவல் நிலையமும் வருகிறது.இந்நிலையில் விபூதி காந்த் காவல் நிலையத்தின் சார்பில் அளிக்கப்பட்ட காவல்துறை மரியாதை அணிவகுப்பில், தனது மகன் அனூப்குமாருக்கு அவரின் தந்தை ஜனார்த்தன் சல்யூட் அடித்து மரியாதை செய்தது நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.
இது குறித்து கான்ஸ்டபிள் ஜனார்த்தன் கூறுகையில், "அனூப் குமார் என்னுடைய மகனாக இருந்தாலும்,காவல் பணி என்று வரும்போது அவர் எனக்கு அதிகாரி தான்.எங்களுடைய தந்தை மகன் உறவு நிச்சயமாக எங்களின் பணியை பாதிக்காது.ஆனால் இந்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.இதை விட ஒரு தந்தைக்கு வேறு பெருமை இருக்க போவதில்லை" என உணர்வு பூர்வமாக தெரிவித்தார்.
காவல்துறை கண்காணிப்பாளர் அனூப் குமார் ஐ.பி.எஸ் கூறுகையில் " என்னுடைய இந்த உயர்விற்கு என்னுடைய தந்தை தான் முழு காரணம்.எங்களுடைய கல்விக்காக அவர் பட்ட கஷ்டங்கள் சிறியது அல்ல.ஆனால் அதை அவர் ஒரு போதும் வெளியில் காட்டி கொண்டதில்லை.அவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் ஒரு நாளும் அவர் எங்களை படி என்று சொன்னதில்லை.
நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் எங்களிடமே விட்டு விட்டார்.ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் சொல்வர்."எதை செய்தலும் அதை உன்னுடைய முழு மனதோடு செய்".ஒரு தோட்டக்காரராக மாற விரும்பினால் கூட பரவாயில்லை ஆனால் அது உன்னுடைய முழுமனதோடு நீ செய்ததாக இருக்க வேன்டும் என அடிக்கடி கூறுவார்.எனது தந்தை தான் என்னுடைய ஹீரோ என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
அனூப் குமார் தனது கடின முயற்சியால் புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புவியியல் பாடத்தில் பட்டம் பெற்று,தற்போது ஐ.பி.எஸ் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்.சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் அனூப் குமார் ஐ.பி.எஸ் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரஷன் தான்.