700 கோடி உதவிக்கு நன்றி தெரிவித்தாரா பிரதமர் ?பினராயி விஜயன் விளக்கம் !
Home > தமிழ் newsகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரசு அமீரகம் 700 கோடி ரூபாய் வழங்க முடிவெடுத்துள்ளது என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். அதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, வெளிநாடுகள் சார்பில் வழங்கப்படும் நிதியுதவிகளை தாங்கள் பெறுவதில்லை என இந்தியா அறிவித்தது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இருந்தபோதிலும், மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வந்தனர்.இந்தநிலையில் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் ஒரு போதும் அறிவிக்கவில்லை என்று அந்நாட்டுத் தூதர் அகமது அல்பானா விளக்கம் அளித்துள்ளார்
தற்போது அனைவரின் பார்வையும் முதலமைச்சர் பினராயி விஜயன் மீது திரும்பியுள்ளது. எந்தத் தகவலின் அடிப்படையில் ரூ700 கோடி என்பதை அவர் தெரிவித்தார் என்று அம்மாநில பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், செய்தியளர்களை நேற்று மாலை சந்தித்த பினராயி விஜயன் ரூ700 கோடி விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். பினராயி விஜயன் பேசுகையில், “இந்தச் செய்தியை இருநாட்டு தலைவர்கள் உலகிற்கு கூறியுள்ளார்கள். தற்போது விஷயம் அதனை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதுதான். என்னுடைய பார்வை, அந்த நிதியுதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது” என்றார்.
மேலும், “வளைகுடா தொழிலதிபர் யூசப் அலிதான் தன்னிடம் இந்தத் தகவலை தெரிவித்தார். இதனை ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து இருக்கிறேன். யூசப் அலி, ஐக்கிய அரபு அமீரகம் தலைவர்களை சந்தித்த போது அவரிடம் இதனை தெரிவித்துள்ளார்கள். பின்னர் அலி என்னிடம் இந்தத் தகவலை கூறினார். நான் அப்பொழுதே அவரிடம் கேட்டேன், மக்கள் மத்தியில் இதனை கூறலாமா என்று?. சொல்லுங்கள் என்று அவர் உறுதி அளித்தார். நானும் தெரிவித்தேன்.
மேலும் பிரதமர் மோடியின் ட்விட்டரில் உள்ள தகவலை படித்தாலே புரியும். ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமதுவிற்கு பிரதமர் மோடி கடந்த 18ம் தேதி அனுப்பிய ட்விட்டில், ‘கேரளாவின் தற்போதையை இக்கட்டான சூழலில் நீங்கள் நிதியுதவி அறிவித்துள்ளதற்கு மிக்க நன்றி. உங்களுடைய கவலை இருநாட்டு அரசாங்கள் மற்றும் இந்திய, ஐக்கிய அரபு அமீரகம் மக்களிடையே உள்ள சிறப்பான உறவை காட்டுக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்” என்றார் பினராயி விஜயன்.