‘2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி’.. மருத்துவமனையின் அலட்சியமா?.. மீண்டும் ஒரு சோகம்!

Home > தமிழ் news
By |

கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக பெற்றோர் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி’.. மருத்துவமனையின் அலட்சியமா?.. மீண்டும் ஒரு சோகம்!

திருச்சியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் தனது மனைவி சித்ரா மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வருகிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு  ஒரே பிரசவத்தில் ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

அப்போது பெண் குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் ஒரு வாரமாக ஐ.சி.யூ -வில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து ஒன்றரை வருடம் கழித்து குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள்  குழந்தைக்கு இருதய நோய் இருப்பதை கண்டறிந்து உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சில மாதங்கள் கழித்து குழந்தையின் உடம்பில் தடிப்புகளும், காதுகளுக்கு பின்னால் கட்டியும் இருந்ததைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனே கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். உடனடியாக குழந்தையின் பெற்றோர் மற்றும் மற்றொரு ஆண் குழந்தையின் ரத்தங்களை பரிசோதித்து பார்த்ததில் அவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இருந்ததால், பெற்றோர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னர் குழந்தையை வேறு எந்த மருத்துவமனைக்கும் அழைத்து செல்லவில்லை என்றும், ஆக, அந்த மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தில்தான் பிரச்சனை இருக்க வேண்டும் என்றும் விஸ்வநாதன்-சித்ரா தம்பதியினர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்டபோது திடீரென மருத்துவர்கள் அந்த ரத்தத்தை மாற்றிவிட்டு வேறொன்றை மாற்றியதாகவும், இது தொடர்பாக கேட்டபோது அது முதியவரின் ரத்தம் அதனால்தான் மாற்றிவிட்டோம் என மருத்துவர்கள் கூறியதாக விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த கோவை அரசு மருத்துவமனையின் டீன், குழந்தைக்கு ரத்தச் சிவப்பணுக்கள்தான் ஏற்றியதாகவும், அதில் எச்.ஐ.வி தொற்று பரவாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த குழந்தையின் ரத்த மாதிரியை ட்ராக் செய்து பரிசோதித்துப் பார்த்ததில் அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

COIMBATORE, HOSPITAL, PARENTS, BABY, HIV