டிராவிட் சம்மதம் சொன்னார்;ரவி சாஸ்திரியை சந்தித்தபின் அது நடக்கவில்லை-கங்குலி வேதனை
Home > தமிழ் newsஇந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக இருக்க டிராவிட் சம்மதம் தெரிவித்ததாகவும், ரவி சாஸ்திரியை சந்தித்தபின் அது நடைபெறவில்லை எனவும் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி இங்கிலாந்திடம் 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதனால் ரவி சாஸ்திரியை நீக்க வேண்டும் எனவும், பயிற்சியாளராக அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் தற்போது தான் இந்திய அணி வெளிநாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரவி சாஸ்திரி பயிற்சியாளராகப் பதவியேற்றபோது நடைபெற்ற சில விஷயங்களை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''வெளிநாடுகளில் இந்திய அணி விளையாடச் செல்லும்போது பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டையும்,பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானையும் நியமிக்கலாம் என முடிவு சேய்தோம்.
எங்களின் இந்த முடிவுக்கு டிராவிட்டும் சம்மதம் தெரிவித்தார். அதற்குப்பின்னர் அவர், ரவி சாஸ்திரியை சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பிலும், அதன் பின்னரும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் ஆலோசகராக நியமிக்கப்படவில்லை” என்றார்.
ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான பின்னர், இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கரும், பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருணும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.