'இவங்க திருந்தவே மாட்டாங்க போல'....இந்திய அணியை அவமானப்படுத்திய ஆஸ்திரேலிய பத்திரிகை!

Home > தமிழ் news
By |
'இவங்க திருந்தவே மாட்டாங்க போல'....இந்திய அணியை அவமானப்படுத்திய ஆஸ்திரேலிய பத்திரிகை!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியையும், கேப்டன் விராட் கோலியையும் கிண்டல் செய்து ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்களும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவருகிறார்கள்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எந்த வெளிநாட்டு அணி விளையாட சென்றாலும் அவர்களை,தரக்குறைவாக கிண்டல் செய்வதும், செய்தி வெளியிடுவதையும் அங்குள்ள ஊடகங்கள் சில வாடிக்கையாக வைத்துள்ளன. தென் ஆப்பிரிக்க, இந்திய, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து  போன்ற வலிமையான அணிகள் அங்கு விளையாடும் போது கிண்டல் செய்திகள் தொடர்ந்து வந்தது

 

இந்நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் வரும் 6-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி அடிலெய்ட் போய் சேர்ந்தவுடன்,அங்குள்ள விமான நிலையத்தில் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு நாளேடு ஒன்று இந்திய அணியைக் கிண்டல் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

 

அதில்  'தி ஸ்கார்டி பேட்ஸ்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ள அந்த பத்திரிகை,இந்திய வீரர்கள் வேகப்பந்துவீச்சைப் பார்த்து பயந்து ஓடுபவர்கள், பகலிரவு டெஸ்ட் போட்டியைப் பார்த்து பயப்படுபவர்கள் ஒட்டுமொத்தமாக இந்திய அணி அனைத்துக்கும் அச்சப்படுபவர்கள் என்ற கோணத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்நிலையியில் பத்திரிகையின் இந்த செயலிற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உண்மையான கிரிக்கெட் கலாச்சாரம் இதுவல்ல,இதுபோன்ற செய்திகள், நமது கிரிக்கெட் கலாச்சாரத்தை சர்வதேச அரங்கில் மேலும் நாசமாக்கும் என்று கண்டித்துள்ளனர்.

 

வழக்கத்தை விட , ஆஸ்திரேலியாவுக்கும் கடும் சவால்  விடுக்கும் வகையில் மிக வலிமையுடன் இந்திய அணி இருப்பதால், அவர்களின் மனவலிமையைக் குலைப்பதற்காக இதுபோன்ற செய்தியை ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டு இருக்கலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.