ஒருவழியாக ‘ஒட்டகப் பாலை’ அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்!
Home > தமிழ் newsஇந்திய அளவில் முதன் முறையாக ஒட்டகப் பால் அறிமுகமாகியுள்ளது.
பார்த்திபனும் வடிவேலுவும் நடித்த ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு துபாயில் இருந்துவிட்டு ஊருக்குவந்து தங்கியிருப்பார். அதனால் துபாயில் இருக்கும் கலாச்சாரப்படி இங்கும் வாழ்வதற்கு முயற்சிப்பார். அதிலும் ஒரு வெட்டி பந்தாவிற்காக துபாய் ட்ரெஸ் என்றுச்சொல்லி ஒரு விதமான ஆடையை அணிந்திருப்பதோடு, ‘குடித்தால் ஒட்டகப் பாலில்தான் டீ குடிப்பேன்’ என்று அடம் பிடிப்பார்.
அதற்காக டீ கடைக்காரருடன் ஒரு பெரிய பிரச்சனையே செய்வார். அந்த கேரக்டரின் கனவுதான் தற்போது இந்தியாவில் முதல்முறையாக நனவாகியுள்ளது என்று சொல்லலாம். இந்தியாவில் புகழ்பெற்ற அமுல் நிறுவனம் பால் சார்ந்த பல்வேறு தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகிறது.
குஜராத்தில் உள்ள காந்தி நகர், அகமதாபாத் மற்றும் கட்ச் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஒட்டகப்பால் விற்பனையை, புகழ்பெற்ற அமுல் நிறுவனம், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. மில்க் ஷேக், சாக்லேட்டுகள், ஐஸ் கிரீம் தயாரிப்புகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தி முன்னணியில் இருந்து வருகிறது அமுல் நிறுவனம்.
இந்நிலையில் இந்நிறுவனம் ஒட்டகப் பால் 500 மி.லியை ரூ.50க்கு விற்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பாலினை சுமார் 3 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டிகளில் வைத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஒட்டகப்பாலினைக் கொண்டு தயாரிக்கப்படும் சாக்லேட்டுகளை அமுல் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான இன்சுலின் சுரப்பது உள்ளிட்ட பல மருத்துவ நற்குணங்கள் கொண்டதாக கருதப்படும் ஒட்டகப்பால் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒட்டகப்பால் எந்த அளவுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.