திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று நேற்றுடன் 49 ஆண்டுகள் முடிந்து இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மு கருணாநிதி. வயது மூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் தி.மு.க தலைவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நேற்று அவரின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தனர். அவரின் நலம் குறித்து விசாரித்தபின் பேசிய அவர்கள் கருணாநிதி விரைவில் நலம்பெற்று திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தனர். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய ஆளுமையான கருணாநிதி பற்றிய முக்கிய தகவல்கள் சிலவற்றைக் காணலாம்.
தி.மு.க தொண்டர்களாலும் மற்றும் தன்னை வியந்து பார்க்கும் பலராலும் முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், கலைஞர் மற்றும் இன்னும் பல சிறப்புப் பெயர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. தட்சிணாமூர்த்தி என்கிற இயற்பெயரைக் கொண்ட இவர்1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூர் அருகே உள்ள திருக்குவளை என்னும் ஊரில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையார் தம்பதியினருக்கு மகனாய்ப் பிறந்தவர் கருணாநிதி.