கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர், தனது சொந்த ஊரான புலியூருக்கு ஓசூரில் இருந்து சென்றுகொண்டிருந்துள்ளார். போகும் வழியில் ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்துக் கொண்டு போன் பேசியபடி சென்றுள்ளார்.
அவ்வாறு பேசிக் கொண்டு சூளகிரி அருகே அவர் சென்றபோது, அவரது செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது. இதனையடுத்து நிலைதடுமாறி ஆறுமுகம் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். செல்போன் வெடித்ததால், ஆறுமுகத்தின் காது, கன்னம் என பாதி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அட்மிட் செய்துள்ளனர்.
இவ்வாறான அசம்பாவிதங்கள் பெரும்பாலும் ஸ்மார்ட் போன்களியே நிகழ்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? என்னவெல்லாம் செய்தால் அல்லது செய்யாமல் இருந்தால் செல்போன் வெடிப்பதைத் தவிர்க்கலாம்; தடுக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
அதெப்படி செல்போன்கள் வெடிக்கச் செய்யும் என்கிற கேள்விக்கு நம்மிடம் பூடமாக ஒரு பதில் இருக்கும். உண்மையில் செல்போன்கள் வெடிப்பது என்பது பேட்டரிகளால் நிகழ்வது. ஆக, குறிப்பிட்ட செல்போனுக்கு உரிய அதே ரக பேட்டரிகளைப் பயன்படுத்துவது அவசியம்.