passion studios தயாரிப்பில், சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம், ‘என்னங்க சார் உங்க சட்டம்.’
நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் தயாரிப்பாளர் பக்ஸிடம் கதைசொல்கிறார். தன்னை வைத்தே அவர் சொல்லும் அந்த கதையின் முதற்பாதியில் வெவ்வேறு சாதி, மத பெண்களை காதலித்து, வழக்கமான காரணங்களால் பிரேக் அப் பண்ணும் காதல் காமெடி கலந்த ஒரு கதையை ஜாலியாக சொல்கிறார். இரண்டாம் பாதியில் இட ஒதுக்கீடு எனும் சீரியஸான களத்தில் கதை சொல்கிறார். இதில் இயக்குநரின் பார்வை என்ன என்பதே படம்.
நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் கவனம் ஈர்க்கிறார். ரோகிணி, பகவதி பெருமாள், ஜூனியர் பாலையா, சாய் தினேஷ்(நந்தன்), விஜயன்(நரேன்) என நடிகர்கள் அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிரார்கள். “சாதியை ஒழிக்க முடியாது, அது கடவுளோடு கலந்துவிட்டது”, “எங்க தட்சணையை ஏற்கும் கடவுள் எங்க ஆள் செய்யும் பூஜையை ஏற்கமாட்டாரா?” என வசனங்களுக்கு அப்ளாஸ்.
அருண் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு பக்கபலமாக நிற்கிறது. குணாவின் இசையில் ஜீரக பிரியாணி மனதில் நிற்கிறது. பின்னணி இசையில் உணர்வுகளை கூட்டியிருக்கலாம். முதல் பாதியில் ஒரு கதை, இரண்டாம் பாதியில் இரண்டு கதை என படத்தை தொகுத்த விதத்தில் எடிட்டர் பிரகாஷ் கருணாநிதிக்கு தனி பாராட்டுகள்.
தலைப்புக்கும் முதல் பாதி கதைக்கும் தொடர்பில்லை. காதல், காமெடி என போகும் முதல் பாதியின் ஒரு காட்சியில், “அனைவரும் அர்ச்சகராகலாம் சட்டம் இயற்றிய கடவுளைப் பாராட்டி நன்றி” என்று திராவிட ஆளுமைகள் இருவரை விமர்சனம் செய்யும் சர்காஸ்டிக் போஸ்டர் ஒன்று பின்னணியில் காணமுடிகிறது. ஆகம விதிகளை கற்ற தாழ்த்தப்பட்ட இளைஞரான நந்தன் அர்ச்சகர் ஆகிறார். எனினும் அவருடன் இண்டர்வியூவுக்கு வரும் ரஞ்சித் தாசன் கேரக்டர் மெட்ராஸ் ஸ்லாங், கபாலி ரிங் டோன், ரஞ்சித் தாசன் என குறியீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது நெருடலை தருகிறது. கலசத்துக்கு பூணூல் சுற்றும் அடிப்படை கூட பயிற்சி பெறாதவராக காட்டப்படுவது நம்பும்படியாக இல்லை.
தெரிந்தவர் என்பதால் டிஎன்பிஎஸ்சி வேலையை, வசதி படைத்தவரான மீரா மிதுனுக்கு கொடுக்க முனைகிறார் ஒரு மேலதிகாரி. ரோகிணி அதை முடிந்தமட்டும் தடுத்து பார்க்கிறார். கடைசியாக மீரா மிதுனின் வயது, இன்னொரு ஏழ்மையான இளைஞரை விட அதிகமாக இருக்கிறது. எனவே தகிடுதத்தம் பண்ணி அந்த வேலையை அந்த ஏழ்மையான இளைஞருக்கு ரோகிணி பெற்றுத்தருகிறார். ஆனால் அதே இண்டர்வியூவை அட்டென் பண்ணிய தனக்கு இந்த வேலை கிடைக்காததால், ஜெயராம் பிரபு என்கிற இன்னொரு ஏழ்மையான பிராமண இளைஞர் விரக்தி அடைகிறார். இந்த இடத்தில் - ரெக்கமண்டேஷன், இண்டர்வியூ கமிட்டியினருக்குள் நடக்கும் பனிப்போர் மற்றும் சாதி ரீதியான ரிசர்வேஷன் சட்டம் ஆகிய இரண்டில் எது சிக்கலாக உள்ளது என்பதை திரைக்கதையில் இன்னும் தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம்.
முதற்பாதியின் நடிகர்களையே இரண்டாம் பாதியின் இன்னொரு கதையில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாக நடிக்க வைத்திருப்பதும், இயக்குநர் சொல்ல நினைக்கும் கதை இரண்டாம் பாதியில் இருக்க, முதற்பாதியில் ரசிக்கும்படியான பொழுதுபோக்கான ஒரு கதையை சொல்லி பார்வையாளரை தயார்ப் படுத்திய சுவாரஸ்யமான திரைக்கதை உத்தி பாராட்டுக்குரியது.
நல்ல நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது இட ஒதுக்கீடு. ஆனால் பிராமணர்களுள் ஒடுக்கப்பட்ட சிலர் உட்பட பொருளாதார ரீதியாக நலிவடைந்த பலரும், இந்த சட்டத்தின் மூலம் பயனடைவதில்லை என்றும், இந்த சட்டத்தை கள ஆய்வுக்கு உட்படுத்தி, திருத்த வேண்டும் என வலியுறுத்துகிறது திரைப்படம். அத்துடன் இந்த கருத்தை ஜெயராம் பிரபு என்கிற பிராமண இளைஞரின் வாயிலாக முன்வைக்கிறது.
வழக்கமான திரைப்படங்களுக்கு மத்தியில் மனதில் பட்ட சமூக கருத்தை பேசுவதற்கான சுதந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு, விவாதத்தை உண்டுபண்ணும் ஒரு படத்தை கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பி.ஜெ!