S.வினோத் குமார் தயாரிப்பில் சமுத்திரகனி, ஆத்மியா, யோகிபாபு, E.ராமதாஸ், மூர்த்தி, எஸ்.எஸ்.ஸ்டான்லி , பவா செல்லத்துரை, சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிப்பில் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் 2021, ஜூலை 11-ல் சன்.டி.வியில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் ‘வெள்ளை யானை’.
விவசாயக் கடன்களை கட்ட முடியாமல் தவிக்கும் பல விவசாய குடும்பங்களில், இரண்டு குடும்பங்கள் சமுத்திரகனி - ஆத்மியா மற்றும் மூர்த்தி - சரண்யா குடும்பம். வராக் கடன்களை வசூலித்தால், லட்சக்கணக்கில் வட்டியில்லா வீட்டுக்கடனும், 5% கமிஷனும் தருவோம் என்று ஏஜெண்டுகளை முறுக்கேற்றி ஏவிவிட்டு பார்க்கிறது பொதுத்துறை வங்கி நிர்வாகம். அதற்கென விவசாயிகளின் தன்மானம், சுயமரியாதை உள்ளிட்டவற்றை டார்கெட் செய்து அவர்களின் கோபத்தை கிளறி பேச, விழும் முதல் சாவு மூர்த்தியுடையது. அங்கு விழுந்த விவசாயமும் விவசாயிகளின் வாழ்வும் என்ன ஆகிறது என்பது மீதிக்கதை.
“எங்க வரிப்பணத்த எங்களுக்கே வட்டிக்கு குடுப்பீங்களா?”, “லட்சக்கணக்கில் கடனை வாங்கிட்டு ஓடி போனவன நம்ம என்ன செஞ்சோம்?”,“விவசாயிகளை மதிக்காத தேசம் விஷத்தை தான் சாப்பிடும்”, “மருந்தை அடிச்சதுக்கு பதிலா குடிச்சிருக்கணும்” என சாட்டை வசனங்கள்.
பாவப்பட்ட விவசாயிகளை பிரதிபலிக்கிறார் சமுத்திரகனி. எனினும் மொத்த கிராமத்திலும் அவர் பேசும் மொழி மட்டும் இலக்கிய தரத்தில் இருக்கிறது. எப்போதும் அதிகாரத்துக்கு எதிரான புரட்சி வசனங்களை பேசும் சமுத்திரகனியை, இப்படம் முழுவதும் அப்பாவி விவசாயியாகவும், சூழ்நிலை கைதியாக பார்க்க முடிகிறது. எனினும் அவருக்கு அது ‘செட் ஆகலயோ’ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அளவான நடிப்பில் ஆத்மியா. மெதுவாக நகரும் வெள்ளை யானைக்கு யோகிபாபு ‘யானைபலம்’.
விவசாயிகளுக்கு உதவும் அந்த இளம் கலெக்டர், அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு நம்பிக்கை ஒளி. வேலை செய்து கடனை அடைக்க.. அனைவரும் பெங்களூர் செல்லும் படலம் படத்துக்கு வேறு கலர் கொடுக்கிறது.
சமகால கிராமத்தை கச்சிதமான டோனில் பதிவு செய்கிறது விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு. நீட்டி முழக்காமல் வெள்ளை யானையை தந்திருக்கிறது ஏ.எல்.ரமேஷின் எடிட்டிங். பாடலோ, பின்னணி இசையோ கதையோடு சேர்ந்து‘அடக்கி வாசித்துள்ளார்’ சந்தோஷ் நாராயணன்.
வங்கிக்கடன், செயற்கை உரம், வறட்சி, வெளிநாட்டு விதைச்சட்டம் என பலவற்றாலும் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகளின் உண்மைநிலையை கமர்ஷியல் ஹீரோக்களின் களத்தில் இருந்து காட்டாமல், விவசாயிகளின் கண்ணோட்டத்தில் காண்பித்தது ஒரு துணிச்சலான முயற்சி. 2 மணி நேரம் 8 நிமிடத்தில் இவ்வளவு கதை சொல்ல முடிந்ததற்கு பாராட்டுகள்.
கதைக்குள் சென்ற பிறகு, சமுத்திரகனி - ஆத்மியாவின் காதல் காட்சிகளை அந்த கல்யாண மாண்டேஜ் பாடலிலேயே காட்டியிருக்கலாம். சமுத்திரகனி என்ன படித்துள்ளார்? அவருடைய விவசாய அல்லது உலக அறிவு எத்தகையது? அவற்றை அவர் எங்கு கற்றார்? போன்றவை மிஸ்ஸிங். பெங்களூரு சென்று வேலை செய்பவர்களின் ஊரில் உள்ள வீடுகளில் என்ன நிலைமை என்பது அழுத்தமாக சொல்லப்படவில்லை. இன்னும் கூட தாக்கத்தை ஏற்படுத்தும் வலுவான கதையினாலும், அழுத்தமான காட்சிகளாலும், சவுக்கடி வசனங்களாலும் திரைக்கதையை நிரப்பியிருக்கலாம்.
தன் பலம் தெரியாத யானை பிச்சை எடுக்கும் என்று சொல்லப்படுவது உண்டு. இந்த படத்தில் வரும் இந்த வசனம் போலவே, வெள்ளை எனும் கதாபத்திரமாக வரும் சமுத்திரகனியையும் அவரை போன்ற விவசாயிகளையும் தங்கள் பலத்தை உணர வலியுறுத்துகிறது ‘வெள்ளை யானை.’