ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் - கலைமகன் முபாரக் தயாரிப்பில், கவின் இயக்கத்தில் பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் வின்னர் முகேன் அறிமுக நடிப்பில் வெளியாகியுள்ளது வேலன் திரைப்படம்.
பொள்ளாச்சி பகுதியில் பெரிய மனிதராக விளங்கும் பிரபு, ஊருக்குள் மரியாதையுடன் வாழ்கிறார். அவருடைய மகன் முகேன் (வேலன்) படிப்பு வராமல் ரவுடித்தனம் பண்ணிக்கொண்டு 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயில் ஆக, பிரபு அவரிடம் பேசுவதை குறைத்துக் கொள்கிறார்.
அப்பாவின் அன்பைப் பெற அடுத்த அட்டெம்ப்ட்களில் பாஸ் பண்ணி, ரெக்கமண்டேஷனுடன் கோவை தனியார் கலைக்கல்லூரியில் முகேன் சேருகிறார். அங்கு மலையாளம் பேசும் நாயகி மீனாட்சியுடன் முகேன் காதலில் விழுகிறார். அதன் பின்னர் அந்த காதலில் ஒரு திடீர் பிரச்சனை எழுகிறது. அந்த பிரச்சனையில் சூரியின் காதலும் சிக்குகிறது. அதில் தம்பி ராமையா முகேனுக்கு முக்கிய பிரச்சனையாக மாறுகிறார்.
இதனிடையே பிரபுவுடன் ஹரிஸ் பெரடி தீராப் பகைக்கு நிற்கிறார். இவர்களின் பகை என்ன என்பது மெல்ல ரிவீல் ஆகிறது. அந்த பகை என்ன? அது எப்படி தீர்கிறது? முகேன், சூரியின் காதல் என்ன ஆனது? என்பதே வேலனின் மீதிக்கதை.
அறிமுக நடிப்பில் டோஸேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரசிக்கும்படியாய் கிராமத்து இளைஞனாக முகேன் கலக்குகிறார். நாயகி மீனாட்சி அளவான நடிப்பில் அழகாக தெரிகிறார். தனது சித்தப்பாவின் அதே வகுப்பில் படிப்பதுடன் செல்ல சண்டைபோட்டு கவனம் ஈர்க்கிறார் ப்ரிகிடா.
முதற்பாதியில் பிராங்க் ராகுல், இரண்டாம் பாதியில் சூரி காமெடி டிராக்கில் கதையை கைப்பிடித்து அழைத்து சொல்கின்றனர். பிரபு தன் பாத்திரத்தில் பொருந்துகிறார். படத்துக்கு பலம் சேர்க்கிறார். ஹரிஸ் பெரடி வரும் காட்சிகள் கதைப் பின்னணிக்கு பலம் சேர்க்கின்றன.
பிரபுவின் சிறுவயது ஃபிளாஷ் பேக் காட்சியில், தவறு செய்தவரை மட்டும் போலீஸில் பிடித்துக் கொடுத்திருக்கலாம். அந்த குடும்பத்துக்கு தேவையானதை ஜோ மல்லூரி(பிரபுவின் அப்பா) செய்திருக்கலாம். இந்த விமர்சனத்தை கிளைமாக்ஸில் பிரபு தன் தந்தையின் மீது வைத்திருக்கலாம். வழக்கமான கிளைமாக்ஸ் ஃபார்முலாவை கொஞ்சம் மாற்றி இருக்கலாம்.
பிரபுவுடன் அறிமுகம் ஆகும்போது தம்பி ராமையா பேசும் மலையாளத்தை ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்கிறார். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில், நீண்ட பெரும் தமிழ் வசனத்தை நன்றாக பேசும் தம்பி ராமையா, தமிழ் மட்டுமே தெரிந்தவர்களிடம் கூட மலையாளம் பேசுகிறார். உச்சரிப்பிலும் தடுமாறுகிறார். சில இடங்களில் பாலக்காடும் பொள்ளாச்சியும் ஒரே ஊராக இருப்பது போல, கதை மாந்தர்கள் வந்து போகின்றனர்.
கோபி ஜெகதீஸ்வரனின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு கண்களுக்கு ட்ரீட் தருகிறது. கோபி சுந்தர் இசையில் பாடல்கள் வெரைட்டி. பின்னணி இசை சூழ்நிலைக்கு ஏற்ப பொருந்துகிறது. முகேன் பாடிய சத்தியமா என்ற பாடல் முனுமுனுக்க வைக்கிறது.
கோவை கல்லூரி, கேரள பெண்கள், பொள்ளாச்சி பின்னணி, பாலக்காடு பார்டர் என கதைக்குத் தேவையான பலமான திரைக்கதையை ஒரே நேர்க்கோட்டில் இணைந்து நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் கவின்.
தந்தையின் பாசமா? தன் காதலா? என தடுமாறும் ஹீரோ, எதிர்பாராத ட்விஸ்ட்டாக வரும் சூரியும், சூரியும் காதலும், எப்படி இருந்தாலும் பெரிய இடத்து சம்மந்தம் வேண்டும் என அதகளம் பண்ணும் தம்பி ராமையா, மணப்பெண்ணை மாற்றி தூக்குவது, ஜோசியருக்கு காசு கொடுத்து பொய் சொல்ல சொல்லி காமெடி பண்ணுவது என ஜனரஞ்சக ஃபார்முலாவில் வேலன் நிமிர்கிறான்.