சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரஸா, ரம்யாகிருஷ்ணன், பிரபு, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அட்டாரினிட்டிகி தாரேதி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
தன் தாத்தாவின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆசைப்படி குடும்பத்தை ஒன்று சேர்க்க துடிக்கும் பேரனின் கதை. வழக்கமான சுந்தர்.சி படம் போல காமெடி, சென்டிமென்ட் என ஒரு முழு கமர்ஷியல் பாக்கேஜாக இந்த படம் இருந்ததா என்று இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
இந்த படத்தில் ஹீரோ கேரக்டர் சிம்புவுக்கென்றே அளவெடுத்தது போல பக்காவாக பொருந்துகிறது. ஒவ்வொரு காட்சியிலும் தனது டயலாக் டெலிவரி மேனரிஸத்தால் அதகளம் புரிகிறார். இந்த படத்தில் சில டயலாக்குகள் எல்லாம் அவர் ரியல் லைஃபை நியாபகப்படுத்தும் வசனங்கள் என்பதால் தியேட்டரில் விசில் பறக்கிறது.
ரோபோ ஷங்கர், யோகி பாபு, சுமன், நாசர், விடிவி கணேஷ் அபிஷேக் இப்படி படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருந்தாலும் படம் முழுக்க சிம்பு மட்டுமே ஆக்கிரமத்திருக்கிறார்.
சிம்புவுக்கு பிறகு இந்த படத்தில் முக்கியமான வேடம் ரம்யா கிருஷ்ணனுக்கு. அதுவும் ஆம்பள உள்ளிட்ட படங்களில் பார்த்த டெம்ப்ளேட் வேடம் தான் என்றாலும் தனது நடிப்பால் நியாயம் செய்ய முயற்சித்திருக்கிறார்.
படத்தின் பாடல்களும் அது படமாக்கப்பட்டவிதமும் ஒரு கமர்ஷியல் படங்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்கிறது. ஆனால் சென்டிமென்ட் காட்சிகளில் ஒரே பின்னணி இசையை கொடுத்து தொய்வு ஏற்படுத்துகிறார் ஹிப்ஹாப் தமிழா.
படம் நெடுக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிகிறது. சண்டைக் காட்சிகளில் சிம்பு செய்யும் ஓவர் ஹீரோயிசம் சலிப்பை ஏற்படுத்துகிறது. சென்டிமென்ட் காட்சிகளிலும் பெரிதாக அழுத்தம் இல்லை.
அவன சைலன்ட்டா தான பார்த்திருக்குற ... வயலண்டாகி பார்த்ததில்லையே என படம் முழுவதும் தெலுங்கு டயலாக்குகளை மொழிமாற்றம் செய்தது போல பஞ்ச் வசனங்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இந்த படத்தின் பெரிய ரிலாக்சேஷன் யோகி பாபு . படம் முழுவதும் பெரும்பாலான நேரங்களில் இவரது ஒன் லைனர்களால் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்.
ஜாலியான திரைக்கதை, நகைச்சுவையான வசனங்கள் இருந்தாலும், வழக்கமான சுந்தர்.சி பார்முலா இந்த வந்தா ராஜாவாதன் வருவேனில் மிஸ்ஸிங்