சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியுள்ள படம் ‘வாழ்’. ‘அருவி’ அருண் பிரபு புருஷோத்தமன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வீடு, வேலை, குடும்பம், வீடியோ கேம்ஸ், க்ளீஷேவான காதல் என வறட்சியான ஐடி வாழ்க்கையை வாழ்கிறார் பிரதீப். எதிர்பாராத சந்திப்பு, சிக்கல், பயணம், அனுபவங்களால் உண்மையில் அவருக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறது என்பதே கதை.
பிரதீப்க்கு காமெடி நன்றாகவே வொர்க் அவுட் ஆகிறது. அவருடைய இன்னொசென்ஸ் திரைக்கதையின் பலம். முதல் பாதியில் பானுவும், இரண்டாம் பாதியில் திவாவும் என 2 நாயகிகளும் தேர்ந்த நடிப்பால் போகிற போக்கில் பிரம்மிக்க வைக்கின்றனர். ‘குட்டி பையன்’ யாத்ரா அருமையான கேரக்டர்.
ஃபார்முலா டெம்ப்ளேட்டை உடைத்த சமரசமில்லாத கதை, புதுமையான திரைக்கதைக்கு பாராட்டுக்கள். பிரதீப்பின் ‘அடாவடி’ காதலியும் அந்த காதலும் அல்டிமேட். க்ளைமேக்ஸில் அந்த எமர்ஜன்ஸி ஃபோன் கால் வேற லெவல். ‘அருவி’ படத்தின் ‘பனையாரக் கிழவி’ கதை போலவே, வாழ் படத்தில் ‘விஸ்வநாதன்’ தாத்தா சொல்லும் புறாக் கதை. இதயத்தைத் தொடுகிறது.
ஷெல்லி கலிஸ்ட்டின் விஷூவலும், பிரதீப் குமாரின் பின்னணி இசையும், படத்தின் இரண்டு சக்கரங்களாகவே மாறி நம்மை ‘வாழ்’ பயணத்தில் அழைத்துச் சென்று அந்த பரவச பேரனுபவத்தை தருகின்றன. கதையோடு சேர்ந்த வெரைட்டி பாடல்களும், காட்சி மொழியும் கவித்துவம். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா-வின் எடிட்டிங் படத்துடனான என்கேஜ்மெண்ட்க்கு இன்னொரு அழகான காரணம்.
யாத்ரா உடைக்கும் பொருட்களில் சில இ.எம்.ஐயில் வாங்கியவை. விஸ்வநாதன் தாத்தா பாங்காக்கில் கடைசி காலத்தை வாழ்ந்து கழிக்க முடிவு செய்கிறார். ஆக பொருளாதார ரீதியில் வலுவாக இருப்பவர்கள் மட்டுமே இழப்புகளை பற்றி கவலை படாமல் இருக்க முடியுமா? இல்லாதவர்கள் எப்படி அப்படி இருப்பது? நாடு நாடாக பறப்பது?
கொலை-கள்ளக்காதல்-விபத்து என பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு அதை ஹேண்டில் செய்யாமல், போலீஸிடமும் எந்த விளக்கமும் சொல்லாமல், தப்பியோடும் ஒரு கைதி, ஊர் ஊராக சுற்றும்போது நம்மூர் போலீஸ் அத்தனை நாள் விட்டு வைக்குமா? திரும்பி வந்து சமாளிக்க வேண்டும் என்றால் எத்தனை பின்புலம் வேண்டும்.? அதெல்லாம் இருந்தால் பிரதீப் முதலிலேயே இந்த பிரச்சனையை எல்லாம் சமாளித்திருக்கலாமே.?
இந்த லாஜிக்கை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு பார்த்தால், அந்த ‘பொலிவியா பெண்ணாக’ வரும் திவா சொல்வது போல “நாம சந்திக்குற மனுஷங்க.. நம்ம வாழ்க்கையவே மாத்துற ஷக்தி படச்சவங்க”.. “வீடு, வேலை, குடும்பம் எல்லாத்தையும் மறந்துட்டு தன்னந்தனியா பயணம் செய்!”.. “நாளைக்கி.. அது நாளைக்கி” என்கிற வசனங்களும், அதை நியாயம் செய்யும் காட்சிகளும், இந்த கால எந்திர உலகத்துக்கு, ‘இந்த நொடியை’ ருசித்து வாழச் சொல்லி எமோஷனலுடனும் எளிமையான ஃபிலாசபியுடனும் வலியுறுத்துகிறது வாழ்!