அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தீனி.
அனி. ஐ.வி.சசி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரிது வர்மா, நித்யா மேனன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Zee Plex தளத்தில் நேரடியாக இப்படம் ஓ.டி.டியில் ரிலீஸாகியுள்ளது.
மஸ்குலர் ஸ்பாசம்ஸ் என்கிற உடல் கோளாறுடன் இருக்கும் தேவ், லண்டனில் இருக்கும் ரெஸ்டாரெண்டில் வேலைக்கு சேர்கிறார். தனது சமையலால் அந்த ஹோட்டலின் ஸ்டாராகவும் ஆகிறார். அதே ஹோட்டலுக்கு தன் அப்பாவின் நினைவுகளுடன், ஒரு ஆசையோடு வேலை பார்க்கிறார் தாரா. இருவருக்கும் பழக்கம் ஏற்பட, தேவ்-வுக்கு உடல் ரீதியாக இருந்த பிரச்சனையின் கதை என்ன என்பது தெரிய வருகிறது.? அந்த சர்ப்ரைஸ் என்னவென்பதே தீனி படத்தின் மீதிக்கதை.
தேவ்-ஆக அசோக் செல்வன் நடித்துள்ளார். உடல் எடை அதிகரித்து செஃப் கதாபாத்திரத்துக்கு அவர் கொடுத்துள்ள உழைப்பு பாராட்டுக்குரியது. நடிப்பிலும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் அசத்தியிருக்கிறார். எந்த விதமான கதையாக இருந்தால், அதை தன் உடல்மொழியால் தாங்க முடியும் என்பதை கவனிக்க வைத்த அசோக் செல்வனுக்கு தீனி.. செம தீனிதான்!
இரண்டு கதாநாயகிகள். ரிது வர்மா அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறார். உணர்ச்சி மிகுந்த காட்சிகளை கூட மென்மையாக சொல்லும் விதம் ரசிக்க வைக்கிறது. நித்யா மேனனுக்கு ஒரு தேவதை போல ‘சித்தரிக்கப்பட்ட’ பாத்திரம். அதற்கு சரியாக பொருந்துகிறார். வழக்கம் போல தனது தேர்ந்த நடிப்பால் தலைமை செஃப் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டுகிறார் நாசர்.
படத்தில் காட்டப்பட்ட உணவுகளையும் அதன் பின்புலத்தையும் மிக அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திவாகர் மணி. கண்ணை கவரும் ஃப்ரேம்களாக பார்த்து செதுக்கியதில் ஆர்ட் டைரக்டரை பாராட்டியாக வேண்டும். ராஜேஷ் முருகன் இசையில் பின்னணி இசை ரம்மியம். பாடல்கள் கதையின் போக்கிலே செல்வது சிறப்பு.
அதிகம் பார்த்து பேசப்படாத ஒரு களத்தில் ஃப்ரெஷ்-ஆக இப்படத்தை கொடுத்த விதத்தில் இயக்குநர் அனி.ஐ.வி.சசி கவர்கிறார். மென் உணர்வுகளை ரசிக்கும்படியாக ஒவ்வொரு காட்சியிலும் அதீத மெனக்கெடலை கொடுத்து, ஃபீல் குட் சினிமா விரும்பிகளுக்கு வேற லெவல் விஷுவல் ட்ரீட் கொடுக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து மிக மென்மையாக கட்டி எழுப்பப்பட்ட உணர்வுகள் அதே மென்மையுடன் முடிந்துவிடுவது ஏமாற்றமளிக்கிறது. ஆனால் எடுத்துக்கொண்ட களத்திற்கு நேர்மையாக இப்படத்தை அணுகியதில் தீனி படத்தை நிச்சயம் ரசித்து மகிழலாம்.