கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள திரைப்படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா, லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
பிறக்கும் போதே தாய் இறந்து போக, முரட்டுத்தனமான ரவுடி அடியாட்களால் வளர்க்கப்படுகிறார் சுல்தான் (கார்த்தி). சுல்தானின் பேச்சுக்கு அனைவரும் கட்டுப்பட, அவரோ, ஒரு கட்டத்தில் அடியாட்கள் கையில் இருந்த கத்தியை முற்றிலும் களைய நினைக்கிறார். அதே நேரத்தில் விவசாயம் செய்ய முடியாமல் கார்ப்பரேட்களால் தவித்து கொண்டிருக்கும் ஊர் பிரச்சனையையும் கையில் எடுக்கிறார். இறுதியில் இவை இரண்டும் என்னவானது என்பதே சுல்தானின் மீதிக்கதை.
சுல்தானாக கார்த்தி படத்தில் ஒன் மேன் ஷோ காட்டுகிறார். ஆட்டம், பாட்டம், சண்டை என பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான கம்ப்ளீட் பேக்கேஜ்க்கு கேரண்டி கொடுக்கிறார். வழக்கம் போல அவருக்கு எளிதாக வரும் ஹியூமர் ஏரியாவிலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.
ராஷ்மிகா மந்தனா கிராமத்து பெண்ணாக அழகில் குளிர்ச்சி காட்டுகிறார். நடிப்பிலும் கூட அதே துருதுறுப்பை காட்டி ரசிக்க வைக்கிறார். மலையாள நடிகர் லாலுக்கு கனமான கதாபாத்திரம். அதில் எந்த குறையுமின்றி கலக்கியுள்ளார். யோகிபாபுவின் கவுண்டர்கள் பல இடங்களில் க்ளாப்ஸ்க்கு கை கொடுக்கின்றன. மேலும் ரவுடிகளாக நடித்திருக்கும் நடிகர்கள், படத்திற்கு கூடுதல் பலம். எனினும் இரண்டு வில்லன்களுமே வலுவில்லாமல் இருக்கின்றனர். கொஞ்சம் கூடுதல் தெலுங்கு வாசனையுடன் படத்தை அணுகியிருக்கிறார் இயக்குநர்.
விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் மெருகேற்றுகிறார் யுவன் ஷங்கர் ராஜா. சத்யன் சூரியனின் கேமராவும் ரூபனின் எடிட்டிங்கும் டெக்னிக்கலாகவும் சுல்தானை உயர்த்தி பிடிக்கின்றன. ஃபைட் மாஸ்டர்களின் வொர்க் வேற லெவல். அதிலும் அந்த இடைவேளை சண்டைக் காட்சி அமர்களம்.!
ரெமோ மூலம் அறிமுகம் கொடுத்த பாக்கியராஜ் கண்ணன், பெரிய ஹீரோக்களுக்கான படம் பண்ணுவதில் தேர்ச்சி காட்டுகிறார். 100-க்கும் மேற்பட்ட நடிகர்களை கொண்டு வேலை வாங்கியதில், நிச்சியம் இயக்குநரை பாராட்டியாக வேண்டும்.
முதல் பாதியில் புதிய களத்தில் தொடங்கும் கதை, அடுத்தடுத்து நமக்கு தெரிந்த, பழக்கப்பட்ட கமர்ஷியல் ஏரியாவில் பயணிப்பது மைனஸ். இரண்டாம் பாதியில் இன்னும் கூட அதிரடி காட்டாமல், மேம்போக்காக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை வேகத் தடை போடுகிறது.