மலேசியா ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் வெண்பா'வான அஞ்சலி, விடுமுறைக்கு தனது சொந்த ஊருக்கு வருகிறார். அங்கே 'சூப்பர்' என்கிற குட்டி பையனுடன் சிறுசிறு திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார் திரு'வான விஜய் சேதுபதி.
இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல் பின்பு காதலாகிறது. அஞ்சலி தன் வீட்டின் எதிர்ப்பையும் மீறி விஜய் சேதுபதியை கரம் பிடிக்கிறார். தான் இதுவரை வேலைபார்த்தற்கான சம்பளத்தை பெற்றுவருவதாக கூறி அஞ்சலி மலேசியா திரும்புகிறார்.
விஜய் சேதுபதியிடம் தகறாரு, மறுபுறம் தன் எதிர்ப்பை மீறி அஞ்சலி திருமணம் செய்த கோபத்தினால், வேறு ஒரு ஏஜென்ட்டிடம் அஞ்சலி தைவானுக்கு வேலைக்கு வருவார் என்று பணம் பெருகிறார் அஞ்சலியின் மாமன். இதனால் தைவான் செல்லும் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார். இது தெரிந்ததும் விஜய் சேதுபதி அங்கே சென்று அஞ்சலி அவரை மீட்டாரா, அதற்காக அவர் எவ்வாறான சிக்கல்களை அனுபவிக்கிறார் என்பதே படத்தின் கதை .
படத்தில் விஜய் சேதுபதிக்கு சரியாக காது கேட்காது. யாராவது சத்தமாக பேசினால் தான் கேட்கும். அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசுவார். இருவருக்குள் நிகழும் உரையாடல்கள் அழகியலாகவும் படத்தின் சுவாரசியத்திற்கும் பெரிதும் உதவியிருக்கின்றன.
மேலும் 'சூப்பர்' என்கிற சிறுவனாக சூர்யா விஜய் சேதுபதி. படத்தில் அவருக்கு நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும், ஆங்காங்கே அநாயசமான டயலாக் டெலிவரியாலும் உடல் மொழியாலும் பெரிதும் கவர்கிறார். படத்தில் சிறிய வேடத்தில் வந்தாலும் வெகு இயல்பான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார் விவேக் பிரசன்னா.
படத்திற்கு மிகப் பெரிய பலம் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும். குறிப்பாக விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு பச்சை பசேல் என்ற அழகான கிராமத்து பின்னணியும், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் இரவு நேரங்களையும் மிகவும் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார்.
இந்த படத்தில் தோல் மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் அதன் பின்னணி குறித்தும் மிகவும் அதிர்ச்சிகரமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்தில் வில்லனாக லிங்காவின் வேடம் சரியாக வடிவமைக்கப்படவில்லை. படத்தில் ஆக்சன் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கும், சூப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ள சூர்யா விஜய் சேதுபதிக்கும் இடையே என்ன தொடர்பு என்பது வெளிப்படையாக சொல்லப்படவில்லை. இரண்டாவது பாதிக்கு மேல் தெளிவே இல்லாத திரைக்கதை சிறு குழப்பைத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் படத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி இருவருக்கும் இடையேயான ரொமான்டிக் காட்சிகள், சூர்யா விஜய் சேதுபதியின் பெர்ஃபாமன்ஸ் படத்தை சுவாரஸியப்டுத்துகின்றன.