நகரத்தில் நிகழும் 4 வேறுபட்ட காதல் கதைகளின் தொகுப்பு 'சில்லுக் கருப்பட்டி'.
கதை 1: குப்பைக்கிடங்கில் வேலை செய்யும் சிறுவன் மாஞ்சாவுக்கு பிங்க் கவரில் இருந்து மிண்டியின் புகைப்படம் கிடைக்கிறது. தினமும் அந்த கவரை தேடி எடுக்கும் அவனுக்கு ஒரு நாள் அதில் ஒரு வைர மோதிரம் காத்திருக்கிறது. அதை மிண்டியிடம் சேர்க்க முடிவெடுக்கிறான் மாஞ்சா.
கதை 2: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன் முகிலனுக்கு, OLA Cabல் தன்னுடன் தினமும் பயணிக்கும் மதுவுடன் தோழமை ஏற்படுகிறது. நாளடைவில் இருவருக்கும் நட்பை தாண்டிய நெருக்கம் உருவாகிறது.
கதை 3: யசோதா-நவனீதன் இருவரும் தனிமையில் வாழும் அறிமுகம் அற்ற முதியவர்கள். ஒரு மருத்துவமனையில் நிகழும் சந்திப்பு இருவரையும் எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதே கதை.
கதை 4: பணி இறுக்கத்தில் வீட்டுவேலை செய்யும் தன் மனைவியை (சுனைனா) புறக்கணிக்கிறார் தனபால் (சமுத்திரக்கனி). இந்த விரிசலை ஈடுகட்ட தனபாலில் முயற்சி பலனளித்ததா?
தனித்தனி படமாக்க தகுதியான 4 வலிமையான கதைகளை ஒரே படமாக தந்து நம்பிக்கைக்குரிய இயக்குநராக மிளிர்கிறார் ஹலிதா ஷமீம். சிறப்பான கதைகளை தேர்வு செய்ததோடு அதை சரியாக வரிசைப்படுத்தி இருப்பது தரம்.
முதல் கதையில் வரும் ராகுல், சாரா அர்ஜுன் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் வெளிப்படுத்தும் அன்பு இதயத்தை வருடுகிறது.
இரண்டாவது கதையில் முகிலனாக வரும் மணிகண்டனும், மதுவாக வரும் நிவேதித்தா சதீஷும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். இருவருக்கும் இடையிலான உரையாடல்கள் கவிதையாக எழுதப்பட்டிருக்கின்றன.
முதிர்பருவ காதலை பேசும் மூன்றாவது கதையில் 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் ஒரு உருவகமாக வருகிறது. சினிமா எப்போதும் தவறவிடும் முதியவர்களின் கதை லீனா சாம்சன்-க்ரவ் மகா ஸ்ரீராமால் மூலமாக அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 'இஞ்சி டி with added dignity' போன்ற பஞ்ச் வசனங்களால் ஆடியன்சை கைதட்ட வைக்கிறார் க்ரவ் மகா ஸ்ரீராம்.
4வது கதையில் சமூத்திரக்கனிக்கும் சுனைனாவுக்கும் வெய்ட்டான ரோல். திருமணத்துக்குப் பிறகு ஒரு வீட்டுவேலை எந்திரமாக மாறிப்போன சுனைனா; சத்தம் என்றாலே அலர்ஜியாகும் சமுத்திரக்கனி, இருவரும் கச்சிதமான தேர்வு. BLACK MIRROR போன்ற புகழ்பெற்ற ஆங்கில வெப் சீரிஸ்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் இருண்ட பக்கங்களை காட்டிவரும்நிலையில் இக்கதையில் வரும் 'அம்மு' எனும் அலக்சா ஸ்பீக்கர் கணவன் - மனைவியை இணைக்கும் பாலமாக வருகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், சுனைனா கதாப்பாத்திரத்தின் (அமுதினி) Alter Ego 'அம்மு'.
4 'நச்' காதல் கதைகளையும் எழுதி-இயக்கி-எடிட் செய்திருக்கும் விதம் ஹலிதா ஷமீமின் திறமையை பறைசாற்றுகின்றன. Feel good Movieக்கு அகராதியில் இடம்பெறவேண்டிய வார்த்தை 'சில்லுக்கருப்பட்டி'.
பிரதீப் குமாரின் இசை கதைக்கு Catalyst. அபினந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யாக்ன மூர்த்தியின் ஒளிப்பதிவு கோர்வையாக சேர்ந்திருக்கிறது.
பார்வையாளர்களுக்கு 100% பாசிட்டிவ் உணர்வெழுச்சி தரும் அற்புதமான FeelGood படம் சில்லுக்கருப்பட்டி.
[மேற்கண்ட விமர்சனம் டிச. 23ம் தேதி செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்ட சிறப்பு காட்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. வரும் டிச. 27ம் தேதி திரைக்கு வரவுள்ள ’சில்லுக் கருப்பட்டி’யை தியேட்டரில் கண்டு களிக்கவும்]