ஜி.வி.பிரகாஷ்குமார், நெடுமுடி வேணு, குமாரவேல், அபர்ணா பாலமுரளி, வினித் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்வம் தாளமயம். மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களைத் தொடர்ந்து 18 வருடங்களுக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் தமிழ் படம்.
ஜி.வி.பிரகாஷின் தந்தை குமாரவேல் மிருதங்கம் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். ஒருநாள் எதேச்சையாக மிருதங்க மேதையான நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிப்பதைக் கேட்டு ஜி.வி.பிரகாஷிற்கும் மிருதங்கம் கற்க வேண்டும் என ஆவல் உண்டாகிறது.
உனக்கு இது சரிப்பட்டு வராது என நெடுமுடி வேணு மறுக்கிறார். நீ ஜெய்ச்சவங்கள மட்டும் தான் பார்க்குற . நான் தோத்தவங்கள பார்க்குறேன் நமக்கு இது சரிப்பட்டு வராது என அவரது தந்தையும் மறுக்கிறார். மிருதங்கம் கற்று நெடுமுடி வேணு மற்றும் தந்தை ஆகியோரின் பேச்சை பொய்யாக்கி, ஜி.வி.பிரகாஷ் வாழ்வில் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
இந்த படத்தின் முதல் பிளஸ் படத்தில் நடிகர்கள் தேர்வு. எல்லா கேரக்டர்களுக்குமான சரியான நடிகர்களை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றிபெறுகிறார் ராஜீவ் மேனன். அதனை அந்தந்த நடிகர்களும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக நெடுமுடி வேணு. கதையில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு அனுபவ ரீதியில் தன் வாழ்நாளுக்கான நடிப்பை அவர் வழங்கியிருக்கிறார். அவர் பேசும் டயலாக்குகளுக்கு தியேட்டரில் பார்வையாளர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது.
படத்தின் அடிநாதமே இசை தான் என்பதால் தன் பொறுப்புணர்ந்து தன் இசையால் படத்துக்கு அழகு கூட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். லைவ் சவுண்டில் படமாக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான இடங்களில் பின்னணி இசையில்லை. முக்கியமான காட்சிகளில் அந்த காட்சியின் வீரியத்தை தனது இசையால் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார்.
ஒரு பக்கம் மிருதங்க கலைஞர்களின் வாழ்வியலையும், மறுபக்கம் மிருதங்கம் செய்பவர்களின் வாழ்வியலையும் யதார்த்தமாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜீவ் மேனன்.
இரண்டாம் பகுதியின் முற்பகுதி வரை மிகவும் நேர்த்தியாகவும் சுவாரசியமாகவும் கதை செல்கிறது. இறுதிக்காட்சிகளில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் போட்டி ஒன்றில் கலந்துகொள்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதுவரை சுவாரஸியமாக சென்று கொண்டிருந்த கதையில் தொய்வு ஏற்படுகிறது. காரணம் அதுவரை வெகு இயல்பாக சென்று கொண்டிருந்த படத்தின் காட்சிகள் இறுதிக்காட்சிகளில் போது அவசர அவசரமாக முடிக்க வேண்டும் என்பது போல் இருக்கிறது.
இருப்பினும் இசை சார்ந்த உணர்வுப் பூர்வமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு நிச்சயம் இந்த படம் தரும். இசை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பொழுது போக்குக்காக திரையரங்கம் வரும் ரசிகர்களையும் இந்த படம் நிச்சயம் ஏமாற்றாது.
(இந்த விமர்சனம் ஜனவரி 28 ஆம் தேதி ஊடகத்தினருக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது. சர்வம் தாளமயம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்)