K9 Studios மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப், சஞ்சனா நடராஜன், அனுபமா குமார் மற்றும் பலர் நடிப்பில் பா.ரஞ்சித் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
கருப்பர் நகர குத்துச்சண்டை போட்டிகள், வாத்தியார் மரபு முதலான வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது படம். முகமது அலிக்கு அஞ்சலி செலுத்தி தொடங்குகிறது. பிரிட்டிஷ் காலத்தில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’யின் தற்போதைய வாத்தியார் பசுபதி. தங்கள் பரம்பரையிடம் மோதி ஜெயிக்க நினைக்கும் இடியாப்ப பரம்பரையை வீழ்த்த சரியான பாக்ஸர் இன்றி தவிக்கிறார்.
பரம்பரை கௌரவத்தை காப்பாற்ற இளம் வீரர் பிரதாப், தன் மகன் கலையரசன் என யார் யாரையோ களமிறக்கி பார்க்கிறார் வாத்தியார் பசுபதி. ஆனால் பசுபதியின் ஒவ்வொரு பாக்ஸிங் விளையாட்டையும் நுணுக்கமாக கவனித்து வந்த ஆர்யாவை பார்த்து பசுபதி வியக்கிறார். தனக்குள் இருக்கும் பாக்ஸரை வெளிக்கொண்டு வர ஆர்யா களமிறங்குகிறார். ஆர்யாவின் தாயார் அனுபமா, இதை விரும்பாமல் கண்டித்து, தந்தை இறந்தது போல் ஆர்யா வாழ்க்கை நாசமாகி விடும் என பயந்து, முதலில் தடுத்து பார்க்கிறார். ஆனால் அவர் பயந்தது போலவே தவறான பாதையில் ஆர்யா செல்கிறார். பின்னர் ஆர்யா திருந்துவதுடன் தன் வாத்தியார் பசுபதி, தன் தந்தையின் நண்பன் ஜான் விஜய், மனைவி துஷாரா விஜயன், அம்மா அனுபமா, கலையரசன் என பலரின் உறுதுணையோடு சார்பட்டா பரம்பரை கௌரவத்தை நிலைநிறுத்தி ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
உடலை அத்தியாயத்துக்கு அத்தியாயம் மாற்றி ஆச்சரியப்பட வைக்கிறார் ஆர்யா. நம் லவ்வர் பாய் ஆர்யா இந்த படத்தில் ரொமான்ஸ் குறைவாகவே செய்திருந்தாலும் நிறைவாகவே செய்திருக்கிறார்.கோபம், அழுகை, ஆற்றாமை, வெறி என பல உணர்வுகளை உள்வாங்கி நடித்திருக்கிறார். திமுக துண்டை தோளில் போட்டுக் கொண்டு கம்பீரம், நிதானம், அரசியல், வரலாறு, பாக்ஸிங் என வாத்தியார் ரங்கனாக பசுபதி மீசையை முறுக்கலாம். முக்கிய கதாபாத்திரத்தை சுமந்திருக்கிறார் கலையரசன். அவ்வப்போது ஆங்கிலம்; ஆர்யாவை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பது என காமெடியும் எமோஷனலும் கலந்த குணச்சித்திர பாத்திரத்தை நிறைவு செய்கிறார் ஜான் விஜய். அப்புறம் அந்த ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் செம்மப்பா... எப்படி இப்படிலாம்? நடிகரா? அல்லது இண்டர்நேஷனல் பாக்ஸரா என வியக்க வைத்துவிட்டார். வியர்க்க வைத்துவிட்டார்.
தொடர்ந்து அம்மாவாக அனுபமா, ஆர்யாவின் மனைவியாக துஷாரா விஜயன், கலையரசன் மனைவியாக சஞ்சனா நடராஜன் என இந்த படத்தில் வரும் பெண்கள் எதார்த்தத்தை நிறுவுகின்றனர்.
எழுபதுகளில் மெட்ராஸ் மாகாண குத்துச்சண்டை மரபையும், அரசியல் சூழலையும் கண் முன் கொண்டு வர, ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் ஜி.முரளி அனைவரும் தங்கள் உழைப்பை சரியாக கொடுத்துள்ளனர். நடன மாஸ்டர் சாண்டி கலக்குகிறார். அன்பறிவ் கொடுத்த சண்டைப்பயிற்சியும், தியாகராஜனின் பாக்ஸிங் பயிற்சியும் படத்தின் பலம். சந்தோஷின் பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை என்றாலும் கதைசொல்லியாகவே மாறி படத்துக்கு உதவுகின்றன. பின்னணி இசை வேற லெவல்.
இது பா.ரஞ்சித்தின் வழக்கத்துக்கு மாறான ஸ்போர்ட்ஸ் படம் எனலாம். திமுக ஆட்சி, ஆட்சிமாற்றம், எமர்ஜென்சி என சமகால அரசியல் சூழல் சரியான இடங்களில் பொருத்தப்பட்டு கதையில் பிரதிபலிக்கிறது. ஆனந்த் பட்டவர்த்தனின் ஆவணப்படத்தை அழகாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
“மானத்தை ஏண்டா பரம்பரையில் கொண்டுவந்து வைக்கிறீங்க” என துஷாரா பேசும் ஒரு வசனமே போதும்; வசனகர்த்தா தமிழ்ப் பிரபாவுக்கு பாராட்டுக்கள். கலைஞர் - எம்ஜிஆர் புகைப்படங்கள், திமுக துண்டு, அம்பேத்கர் போஸ்டர், பெரியார் ஃபோட்டோ, புத்தர் சிலை, நீலம் கருப்பு கலந்த பாக்ஸர் அங்கி என குறியீடுகள் சொல்லும் கதை தனி.
கடைசியில் கலையரசன் தன் தவறை உணர்ந்துவிடுவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கலையரசன் ஆர்யாவை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதாக துஷாரா, ஜான் விஜய், பசுபதி என பலரும் பல விதமாக சொல்லியும், கடைசிவரை ஆர்யா அதை உணர்ந்ததாக காட்டப்படுவதே இல்லை. பாக்ஸிங் ஆர்வத்தில் வேலையை விட்டு, பின்னர் ஜெயிலுக்கெல்லாம் ஆர்யா போகும்போது, வீட்டில் உள்ள அவரது கர்ப்பிணி மனைவி துஷாரா அந்த வறுமையிலும் எந்த வருமானத்தை வைத்து குடும்பம் நடத்துகிறார்.? கடைசி 45 நிமிடம் யூகிக்க முடிந்த கதைதான், இதை நீட்டி முழக்க எதற்கு 2 மணி நேரம் 53 நிமிடம்? என்று கேள்விகள் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும் பெரும்பாலான நேரம் என்கேஜிங்கான திரைக்கதையுடன் நகர்கிறது சார்பட்டா பரம்பரை!