15 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 'சாமி' (2003) படத்தின் 2-வது பாகம் 'சாமி 2' என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் ஆறுச்சாமியைப் போல இந்த பாகத்தின் ராமசாமி ரசிகர்களைக் கவர்ந்தாரா? என இங்கே பார்க்கலாம்.
முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை கொல்வதுடன் சாமியின் வேட்டை தொடரும் என படத்தை முடித்திருந்தார்கள். 2-வது பாகத்தின் தொடர்ச்சி அங்கிருந்து தொடர்கிறது. பெருமாள் பிச்சைக்கு 3 மகன்கள்-மனைவி இருப்பது போலவும் ஆறுச்சாமி-புவனா தம்பதியரின் மகன் ராமசாமியாக விக்ரமையும் படத்தில் 'கனெக்ட்' செய்துள்ளனர். தனது தாய்-தந்தை குறித்து எதுவும் தெரியாமல் தாத்தா-பாட்டி அரவணைப்பில் ஐஏஎஸ் கனவுடன் விக்ரம் தனது இலட்சியத்தை அடைய முயற்சி செய்கிறார்.
இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ், விக்ரமை ஒருதலையாக காதலிக்கிறார். பெருமாள் பிச்சையின் மகன் ராவண பிச்சைக்கும் (பாபி சிம்ஹா), ஆறுச்சாமி மகன் ராமசாமி இடையே ஒருசில உரசல்கள் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் தனது அப்பா-அம்மா குறித்த விவரங்கள், தனது சொந்த ஊரான திருநெல்வேலி ஆகியவை குறித்து விக்ரமுக்கு தெரிய வருகிறது. ஐஏஎஸ் கனவுடன் இருக்கும் விக்ரம் மீண்டும் ஆறுச்சாமியாக அவதாரமெடுத்து திருநெல்வேலி வந்தாரா? கீர்த்தி சுரேஷுடன் அவரது காதல் கைகூடியதா? அப்பா பாணியில் ராவண பிச்சையை வதம் செய்தாரா? என்ற கேள்விகளுக்கான விடையே சாமி 2.
ராமசாமியாக விக்ரம் போலீஸ் கதாபாத்திரத்திற்கு தனது பங்களிப்பினை சரியாக செய்துள்ளார். ஸ்டைலிஷ், மேனரிசம், நடிப்பு, ஆக்ஷன் என எல்லா ஏரியாவிலும் தான் ஒரு நடிப்பு அரக்கன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். குறிப்பாக 15 வருடங்கள் கழித்தும் போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அவரது பிட்னெஸ் வியக்க வைக்கிறது.
முதல் பாகத்தின் திரிஷா கதாபாத்திரத்திற்கு பதிலாக இந்த பாகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தனக்கு அளித்த சிறு கதாபாத்திரத்திலும் அவர் தனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார். விக்ரமை ஒருதலையாக காதலிக்கும் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ், ஒரு கமர்சியல் படத்தின் கதாநாயகி பாத்திரத்தை சரியாக செய்துள்ளார். வில்லனாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா முதல் பாகத்தின் பெருமாள் பிச்சை கதாபாத்திரத்திற்கு ஈடுகொடுத்து நன்றாகவே நடித்திருக்கிறார். படத்தில் சூரி வரும் காமெடி காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதோடு கதையின் ஓட்டத்திற்கும் அவை பெரிதாக பயன்படவில்லை.
இயக்குநர் ஹரி அவரது பாணியில் இந்த படத்துக்கு ஸ்பீடான திரைக்கதை அமைத்திருக்கிறார். அவரின் படங்களில் இருக்கும் வழக்கமான வேகம் இப்படத்தின் முதல் பாதியில் சற்றே குறைவு. பின்பாதியில் வரும் பழி தீர்க்கும் காட்சிகள் படம் முழுவதும் இருந்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.