ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் 'பாகுபலி' பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ராதே ஷ்யாம்'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வம்சி - புரமோத் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் இப்படத்தை தமிழில் ரிலீஸ் செய்துள்ளது.
26 நவ 1976-ல் கதை தொடங்குகிறது. பெரும் ஜோதிட ஞானி சத்யராஜ் அறிவியலுக்கு முன்னரே ஜோதிடம், வானவியல் சாஸ்திரம் அனைத்தையும் கணித்ததை பற்றி கூற, அவருடைய சிஷ்யனும் பெரிய கை ரேகை ஜோதிடரும் விக்ரமாதித்யாவாக அறிமுகம் ஆகிறார் பிரபாஸ். டாக்டராக வரும் பூஜா ஹெக்டேவுடன் காதல் அல்லாத 'பளர்ட் வகை காதல்' கொள்கிறார். தனக்கு காதல் ரேகையே இல்லை என தீர்க்கமாக நம்பும் பிரபாஸ் மீது, பூஜா ஹெக்டே கொள்ளும் காதல் என்னாகிறது? ஹீரோயினின் வாழ்நாள் குறித்த பிரபாஸின் கணிப்பு பலித்ததா? பிரபாஸின் வாழ்க்கை முடிவு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
ஜோதிட நம்பிக்கை, காதல், ரிலேஷன்ஷிப், பிரிவு என அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்திருப்பது திரைக்கதையின் பலம். முற்பாதி நாயகியின் வாழ்வு பற்றியும் பிற்பாதி பிரபாஸின் வாழ்வு பற்றிய ரிவீலேஷனும் திரைக்கதையில் முக்கிய ட்விஸ்ட். "விதியை யாராலும் மாற்ற முடியாது" என்கிற பிரபாஸின் நம்பிக்கையை காட்டிவரும் அதே சமயம், இன்னொரு லேயரில் அதை கவுண்ட்டர் பண்ணும் விதமாக, "ஜோதிட நம்பிக்கை என்பது 99% அறிவியல், 1% காலத்தின் கையில்" என்கிற சத்யராஜின் வசனமும் வந்து போவது 2-ஆம் பாதி திரைக்கதை என்கேஜிங்காக இருக்க உதவுகிறது.
காட்சிக்கு காட்சி வாழ்க்கை, தத்துவம், காதல் ரசம் ததும்பும் கவிதைகள் என அழகு சேர்க்கிறது கார்க்கியின் வசனம். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் எடிட்டிங் கச்சிதம் - இன்னும் கொஞ்ச கத்தரி போட்டிருக்கலாம். காட்சி பிரம்மாண்டத்துடன் கைகோர்க்கிறது எஸ்.தமனின் பின்னணி இசை. கார்க்கியின் வரிகளில், ஜஸ்டின் பிரபாகரனின் இசை, பாடல்கள் மனதில் பதிய மறுத்தாலும் கதைச்சூழலுடன் பொருந்தி வருகின்றன. ரோம் நகரம், கப்பல், மாளிகை என கண்கவர் விஷூவல் அனுபவத்தை தருகிறது ஆர்ட் வொர்க். பீரியட் படத்துக்கு தகுந்த காஸ்டியூமும், வைபவி மெர்ச்சத்தின் நடன அமைப்பும் ஹிஸ்டாரிக்கல் காலக்கட்டத்துக்கு உதவுகின்றன.
திரைக்கதையின் ட்ரீட்மெண்ட் கதையில் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் காதலுடன் ஆடியன்ஸ் கனெக்ட் ஆக முடிவதில்லை. அவர்களின் காதலில் ஆழம் காட்டப்படுவதில்லை. காட்சிகளால் - கேரக்டரால் அல்லாமல் மிகைப்படுத்தப்பட்ட ரொமான்ஸ் வசனங்களாலும் கவிதைகளாலும் மட்டுமே காதல் சொல்லப்படுகிறது. பீரியட் மற்றும் ஃபேண்டஸி எலிமெண்ட் கதைக்கு உதவவில்லை. யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸை நோக்கி படம் மெதுவாக செல்வது அலுப்பைத் தருகிறது.