புத்தம் புதுக் காலை. ஐந்து கதைகள், ஐந்து இயக்குநர்கள் என தமிழுக்கு புத்தம் புதிதாக நேரடி அமேசான் ரிலீஸாக வந்திருக்கிறது இந்த அந்தாலஜி திரைப்படம். முன்னணி இயக்குநர்களான சுதா கொங்கரா, கௌதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜிவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ், கல்யாணி, எம்.எஸ்.பாஸ்கர், ரிது வர்மா, சுஹாசினி, அனு ஹாசன், காத்தாடி ராமமூர்த்தி, குருச்சரண், ஆண்ட்ரியா, லீலா சாம்சன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல்வேறு நடத்திரங்கள் நடித்துள்ளனர். கொரொனா வைரஸ் ஊரடங்கு அறிவித்தபோது நடைபெறும் உணர்ச்சி கதைகளாக இவை உருவாக்கப்பட்டுள்ளது.
முதலில் சுதா கொங்கராவின் இளமை இதோ இதோ. துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என ராவாக படம் எடுக்கும் சுதா கொங்கராவா இப்படி ஒரு பக்கா காதல் கதையை இயக்கியது என ஆச்சர்யப்படும் வகையில் இளமையும், காதலும் ததும்புகிறது. காளிதாஸ் - கல்யாணி ஜோடி., பார்ப்பதற்கே அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. அவர்களின் கெமிஸ்ட்ரியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஜெயராம் - ஊர்வசியின் முதிர் காதல் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு. கொஞ்சம் நகைச்சுவை., கொஞ்சம் ரொமான்ஸ் என புத்தம் புது ஸ்டார்ட்டை கொடுத்திருக்கிறது இந்த இளமை இதோ இதோ.
கௌதம் மேனன் இயக்கியுள்ள அவரும் நானும் - அவளும் நானும். நியூக்ளியர் விஞ்ஞானி தாத்தாவாக எம்.எஸ்.பாஸ்கர் - ஐ.டி வேலை பார்க்கும் பேத்தியாக ரிது வர்மா. இரண்டே பேரை வைத்து கொண்ட, தனது ஸ்டைலில் அழுத்தமான எமோஷனல் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார் கௌதம் மேனன். இக்கதையின் மிகப்பெரிய பலமே எம்.எஸ்.பாஸ்கரும், ரிது வர்மாவும் தான். அதுவும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளை, எப்போதும் போல அசால்ட்டாக கையாண்டு கைத்தட்டல்களை வாங்கி செல்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். ரிது வர்மாவும் எந்த குறையும் இல்லாமல் நடித்து கொடுத்திருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாம்பே ஜெயஶ்ரீ பாடியுள்ள கண்ணா தூது போடா.., இக்கதையை இன்னும் அழகாகவும் கனமாகவும் மாற்றுகிறது.
சுஹாசினி மணிரத்னம் இயக்கியுள்ள Coffee Anyone. கோமா ஸ்டேஜில் இருக்கும் அம்மாவின் பிறந்தநாளும் அதனூடே அவரின் மூன்று மகள்களின் உணர்வு போராட்டங்களுமே இக்கதை. அன்பும் அதிகாரமுமிக்க அப்பாவாக காத்தாடி ராமமூர்த்தி நம்மை கவர்கிறார். அனு ஹாசனின் சின்ன சின்ன எக்ஸ்ப்ரெஷன்களும்., நமக்கு 'ரன்'-ல் தோன்றிய மாதவனின் அக்காவை நியாபகப்படுத்துவதை தவிர்க்கமுடியவில்லை. அனு ஹாசன் கண்டிப்பாக மீண்டும் ஒரு ரீ-என்ட்ரி கொடுக்கலாம். சுஹாசினியும், ஷ்ருதி ஹாசனும் தேவைக்கேற்ப நடிப்பை கொடுத்திருக்கின்றனர். ஆங்காங்கே எமோஷனல் மொமன்ட்ஸை ஏற்படுத்தி., இதமான காபியாக பரிமாறப்படுகிறது இந்த கதை.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ரீ - யூனியன். ஆண்ட்ரியா, குருச்சரண் மற்றும் லீலா சாம்சன் நடித்துள்ள இக்கதை பக்கா சர்ப்ரைஸ் பேக்கேஜ். மாடர்ன் இசைக்கலைஞராக ஆண்ட்ரியா., அவருக்கு கச்சிதமான கதாபாத்திரம்தான். அதே அன்பு கொஞ்சம் அம்மாவாக பேசும் லீலா சாம்சன், மருத்துவராக குருச்சரண். போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கும் தனது பள்ளித் தோழிக்கும், ஸ்கூலோடு இசையை மறந்து போன இந்நாள் மருத்துவருக்குள்ளும் ஒற்றை வீட்டில் நடக்கும் அதிரி புதிரி கூத்துக்கள் இந்த கதையின் மீது பரவசத்தை ஏற்படுத்துகிறது. இசையும் ரகளையும் கலந்து கொடுத்து, இந்த பகுதியில் ராஜீவ் மேனன் நிச்சயம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.
கடைசியாக கார்த்திக் சுப்புராஜின் மிராக்கிள். ஷார்ட் ஃபிலிம் மூலம் சினிமா என்ட்ரி கொடுத்தவர், தனது ஹோம் கிரவுண்டில் சிக்சர் அடிக்காமல் விடுவாரா என்ன..? தனது ட்ரேட்மார்க்கான ஹியூமரையும், ஸ்டைலையும் கார்த்திக் தவறாது கொடுத்திருக்கிறார். பாபி சிம்ஹாவுக்கும் - சரத் ரவிக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி செமையாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. மற்ற கதைகளில் மிஸ்-ஆன சாமானிய மனிதர்களின் லாக்டவுன் வாழ்க்கையை ஓசி புளியோதரையின் வாசத்தோடும் குருஜி டால்க்ஸ்-ன் நக்கலோடும், அவருக்கே உரிய க்ளைமாக்ஸ் ட்விஸ்டோடு கொடுத்திருப்பது மிராக்களை இன்னும் நெருக்கமாக்குகிறது.
பல குறும்படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்கக்கூடும். அவ்வகையில், ஐந்து முன்னணி இயக்குநர்களின் குறும்படங்களை கோர்த்து, உருவாகியுள்ள இந்த புத்தம் புதுக் காலை, மனதுக்கு இதமாக அமைந்திருக்கிறது. இன்னும் இதுபோன்ற பல அந்தாலஜி முயற்சிகள் கண்டிப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் உருவாக்கியதில், வெற்றியை வசமாக்கி கொண்டிருக்கின்றனர் ஒவ்வொரு இயக்குநர்களும். அதற்கேற்ப தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.