வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் வருன், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பப்பி. இந்த படத்தை 'மொரட்டு சிங்கிள்' நட்டு தேவ் இயக்கியுள்ளார்.
மொரட்டு சிங்களான வருன் தன் வீட்டிற்கு வாடகைக்கு குடி வரும் சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். பின்னே அவர்கள் காதலில் பிரச்சனை ஒன்று குறுக்கே வர யோகி பாபு உதவியுடன் ஹீரோ வருன் அந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை.
மொரட்டு சிங்கிளான வருன் பருவ வயது இளைஞர் வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் கட் இல்லாமல் சில நிமிடங்களுக்கு வரும் காட்சியில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கி தனது வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். காதல் காட்சிகள் மட்டுமல்லாமல், நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகளையும் சிறப்பாக கையாண்டு கவனிக்க வைக்கிறார் சம்யுக்தா ஹெக்டே.
வெறும் காமெடியனாக மட்டும் அல்லாமல் வாய்ப்புக் கிடைக்காமல் தவிக்கும் கால்பந்து வீரர் வேடம் யோகி பாபுவுக்கு. படம் முழுக்க தனது ஒன் லைனர்களால் சிரிக்க வைக்கும் யோகி பாபு, படத்தின் முக்கியமான கட்டத்தில் கண் கலங்க வைக்கவும் செய்கிறார். குறிப்பாக யோகி பாபு ரசிகர்களுக்காகவே மாஸ் மூமெண்ட் ஒன்று படத்தில் இருக்கிறது.
காட்சிகளின் தேவைக்கேற்ப பின்னணி இசை அமைத்து கவனம் ஈர்க்கிறார் இசையமைப்பாளர் தரன். குறிப்பாக யுவன் பாடிய 5 மணிக்கு பாடல் கேட்பதற்கு அழகு. தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு கலர் ஃபுல் விஷூவல்ஸ்.
சற்று இயல்பான காதல் காட்சிகள், படம் முழுக்க ஆங்காங்கே வரும் நகைச்சுவை காட்சிகள் என படத்தை சுவாரஸியப்படுத்துகிறார் இயக்குநர். யோகி பாபு வேடத்தை வடிவமைக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தது. நண்பர்களான யோகி பாபுவுக்கும், வருனுக்கும் ஒரே நேரத்தில் வேறு வேறு பிரச்சனைகள். அதனை இருவரும் இணைந்து எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்ற திரைக்கதையை சுவாரஸியமாக சொன்ன விதம் நன்றாக இருந்தது. இந்த படத்தின் பப்பி என்கின்ற நாய் ஒரு கேரக்டராகவே இருக்கும். படத்தின் முக்கிய காட்சியில் அந்த பப்பியை பயன்படுத்திய விதம் வீட்டு விலங்குகள் வளர்ப்பவர்களுக்கு உணர்வுப் பூர்வமான அனுபவத்தை தரும்.
இரண்டாம் பாதியில் பப்பிக்கு ஏற்படும் பிரச்சனைகள் மையமாக இருப்பதால், வருனுக்கும் பப்பிக்கும் இடையேயான காட்சிகளுக்கு சற்று முக்கியத்துவம் அளித்திருக்கலாம். ஒரே குடியிருப்பில் இருக்கும் வருனும் சம்யுக்தாவும் காதலிப்பதை அவர்கள் பெற்றோர்கள் அறியாமல் இருப்பது ஆச்சரியக் குறி. காமெடிக்காக வைக்கப்பட்ட காட்சிகளில் லாஜிக் குறைவால் நம்பகத்தன்மை குறைவு. இருப்பினும் ஒரு காமெடிப் படமாக கவனம் ஈர்க்கிறது.