பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் நிறுவனம் சார்பில் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. ஒரு கொலைக் குற்றத்திற்காக தனது நோய்வாய்ப்பட்ட மகனுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார் மாசிலாமணி.
உண்மையில் மாசிலாமணி அந்த கொலையை செய்தாரா ? கொலையின் பின்னணி என்ன? என்பதை சுவாரஸியமாக சொல்லியிருக்கும் படமே 'ஒத்த செருப்பு'. மாசிலாமணியாக பார்த்திபன். ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் படத்தில் மாசிலாமணி என்ற கதாப்பாத்திரமாகவே மாறியிருக்கிறார் பார்த்திபன். அழுகை, ஆத்திரம், அதிர்ச்சி, வெறி, தனக்கே உரிய நக்கல் என நவரசத்தையும் நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார்.
அவர் யார்? உண்மையில் அவர் தான் கொலையை செய்தாரா ? என்ற போலீஸிற்கு எழும் சந்தேகம் பார்வையாளர்களுக்கும் தோன்ற வேண்டும். மேலும், ஒரு காட்சியில் கூட படத்தில் வேறு நடிகர்களே இல்லை என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு எழக்கூடாது. இந்த இரண்டும் படத்தில் சரியாக வந்திருப்பது பார்த்திபனின் நடிப்பிற்கு உதாரணங்கள்.
ஒரே ஒரு போலீஸ் ஸ்டேஷன் அறை, அதில் ஒரே நடிகர் அவர்களை வைத்து சுவாரஸியமாக கதை சொல்ல வேண்டிய கடினமான பணி இயக்குநரான பார்த்திபனுக்கு. அதனை தனது மாறுபட்ட கோணங்கள் நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் பார்த்திபனின் சுமையை குறைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. உதாரணமாக ஒரு காட்சியில் கரண்ட் இருக்காது. டார்ச் லைட் வெளிச்சத்தை வைத்து ஒரு கதை சொல்லியாக பயன்படுத்தியிருப்பது ராம்ஜியின் திறமைக்கு சான்று.
தனது பின்னணி இசையால் காட்சிகளின் வீரியத்தை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் இசையமைப்பாளர் சி.சத்யா. பைப்பில் தண்ணீர் விழும் ஒலியிலிருந்து, வெளியிலிருந்து வரும் பறவைகளின் ஒலி வரை அவ்வளவு தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு குரல்களும் சரியான உணர்வுகளை வெளிப்படுத்தி அங்கே நடிகர்கள் இல்லை என்ற குறையை போக்கியிருக்கின்றன.
வசனங்கள் வழியாகவே கதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் எழுத்தாளராக மிளிர்கிறார் பார்த்திபன். குறிப்பாக பார்த்திபனுக்கே உரிய நக்கலான வசனங்கள் படத்தை ஆங்காங்கே சுவாரஸியப்படுத்துகின்றன. அந்த வசனங்கள் வெறும் காமெடிக்காக மட்டும் என்று நாம் நினைத்தால் பின்பாதியில் வரும் திருப்பங்களில் அதன் அர்த்தம் புரிகிறது. படம் பார்க்கும் போது இது தான் நடந்திருக்கும் என்று ஒன்றை யூகித்தால், அதிர்ச்சி தரும் வேறொன்றை சொல்லி நம் யூகங்களை தவிடு பொடியாக்குகிறார் இயக்குநர் பார்த்திபன்.