காளிதாஸ், மேகா ஆகாஷ் நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள திரைப்படம் ஒரு பக்க கதை. Vasan Visual Ventures இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. 2014-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இத்திரைப்படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனதால், இப்போது Zee 5 தளத்தில் நேரடியாக கிருஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகியுள்ளது ஒரு பக்க கதை.
கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் சரவணனுக்கும் (காளிதாஸ்) - மீராவுக்கும் (மேகா ஆகாஷ்) காதல். பையன் செட்டில் ஆகட்டும் என இரு வீட்டு பெற்றோரும் காத்திருக்க, இதற்கிடையில் இவர்களின் காதல் கதை, மீரா கர்பமான கதையாக மாற, இருவருக்கும் உடனே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இப்படியான சூழலில் ஒரு விசித்திரமான உண்மை அனைவருக்கும் தெரிய வர, அதை தொடர்ந்து வந்த பிரச்சனைகள் என்ன..? இந்த இரண்டு இளம் காதலர்களும், குடும்பங்களும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்.? என்பதை நல்ல மெசேஜோடு சொல்லியிருப்பதே ஒரு பக்க கதையின் மீதிக்கதை.
சரவணனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். காலேஜ் படிக்கும் மிடில்கிளாஸ் வீட்டு பையனாக கச்சிதமாக பொருந்துகிறார். கதாநாயகி மீராவாக நடித்திருக்கும் மேகா ஆகாஷுக்கு கணம் பொருந்திய கதாபாத்திரம். ஆனால் படம் முழுக்க ஒரே மாதிரியாக, அவர் உடல்மொழியையும் உச்சரிப்பையும் சுமந்து திரிவது கொஞ்சம் அலுப்பூட்டிவிடுகிறது. சரவணன் - மீரா இருவீட்டு பெற்றோர்களாக நடித்திருப்பவர்களும், நடுத்தர குடும்பங்களின் யதார்த்தத்தை பிரதிபலிக்க முயற்சித்திருப்பது சிறப்பு.
படத்தில் வந்து இன்னும் கொஞ்சம் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள் அவதாரமாக வரும் சேதுவும் அவனுடைய ஸ்கூல் தோழனும். குறிப்பாக இருவரின் ரியாக்ஷன்களும் இறுக்கமாக செல்லும் கதையில் கொஞ்சம் புன்சிரிப்பையும் எட்டி பார்க்க வைத்தது அழகு. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம் மூலம் வித்தியாசமான Situational Comedy-ல் க்ளாப்ஸ் அள்ளிய பாலாஜி தரணிதரன், அதில் அவர் சூப்பர் ஸ்ட்ராங் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
கையளவு சைஸ் கதையை எடுத்து கொண்டு, அதில் கடவுள், மூடநம்பிக்கை என்று அவசியான கருத்துக்களை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். வழக்கமான பாணியில் இல்லாமல், தனக்கே உரித்தான கதை சொல்லாடல் மூலம் இக்கதையை நகர்த்தியிருக்கிறார். அதற்கு பாலாஜி தரணிதரனின் எழுத்துக்கள் நிச்சயம் கை கொடுக்கிறது. க்ளைமாக்ஸ்-க்கு முந்தைய பகுதியில் சீரியஸ்னஸ்-ம் காட்டி கவனிக்க வைக்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை தேவையாண அளவில் அமைந்திருக்கிறது. ஆனால் படம் நெடுக ஒரே மாதிரியான சில ட்யூன்களே மாற்றி மாற்றி லூப்பில் ஓடி கொண்டிருந்தது போன்ற உணர்வை தந்துவிடுகிறது. 96 பிரேம் குமாரின் லென்ஸ், இந்த காதல் கதையில் முடிந்தளவு ஸ்கோர் செய்கிறது. கோவில் மடத்தின் உள்ளே நடக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவின் நேர்த்தியை காட்டி லைக்ஸ் அள்ளுகிறார் பிரேம். ஆண்டனியின் எடிட்டிங் கதைக்கேற்ற வேகத்தில் நிதானமாக பயணிக்கிறது.
படத்தின் பெரிய குறையாக இருப்பதே இக்கதை நகரும் விதம்தான். அதிகமான சிங்கிள் டேக் காட்சிகளும், இயல்பாக நடப்பதை அப்படியே காட்சிப்படுத்தியிருப்பதும் கொஞ்சம் பொறுமையை சோதித்து விடுகிறது. ஒரு மேஜிக்கல் ரியலிசம் போல துவங்கப்பட்ட ட்ராக் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருப்பினும், அதை கதையின் போக்கில் அம்போ என விட்டு செல்வது ஏமாற்றத்தை தருகிறது. இன்னும் கூட காட்சியமைப்பில் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் நல்ல முயற்சியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது
நடிகர்களின் தோற்றம், கோர்ட் காட்சி க்ளைமாக்ஸ் என கொஞ்சம் பழைய படத்தைதான் பார்க்கிறோம் என்ற ஃபீலை கொடுத்துவிடுகிறது ஒரு பக்க கதை. அதீத மூடநம்பிக்கையும் கூட ஆபத்தே என்ற அவசியமான கருத்தை ஒரு வித்தியாசமான காதல் கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால் திரைக்கதையில் அதற்கான மொமன்ட்ஸ்களை சரியாக பயன்படுத்தியிருந்தால், நிச்சயம் எல்லோரையும் கவர்ந்திருக்கும்.