இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில், ZEE5 OTT-ல், நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் “முதல் நீ முடிவும் நீ”.
படத்தில் நடித்திருக்கும் கிஷன் தாஸ் (வினோத்), K.ஹரிஷ் (சைனீஸ்), மீத்தா ரகுநாத்(ரேகா), அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன்,வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் CSV, ஹரினி ரமேஷ், உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் புதுமுகங்கள் என்கிற சுவடே இல்லாமல் நடித்திருப்பதை காண முடிகிறது.
தமிழ்நாட்டின் சென்னையில் 90களின் பிற்பகுதியில் இருந்து வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் வாழ்வை மையமாகக் கொண்ட ஒரு நாஸ்டால்ஜியா திரைப்படமாக முதல் நீ முடிவும் நீ அமைந்துள்ளது. வினோத் - ரேகா எனும் கதாபாத்திரங்களின் பள்ளி கால காதல், புரிதல் காட்டப்படுகிறது.
ரேகாவின் காதலில் ஏற்படும் புரிதலில் ஏற்படும் பிரச்சனையால் அந்த காதலை தூக்கிப்போட்டுவிட்டு போகும் வினோத்தின் எதிர்காலம் இசையால் நிரம்பியிருந்தாலும், அதில் ரேகாவின் இல்லாமை அவனது வாழ்வை வெறுமையாக்குகிறது என்பதை ‘வித்தியாசமான ரோலில்’ வரும் ஃபேண்டசி கதாபாத்திரமான தர்புகா சிவா, வினோத்துக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.
இதில் வினோத் மற்றும் ரேகாவைச் சுற்றி சைனீஸ், அனு, கேத்ரின், ரிச்சர்டு என பல கேரக்டர்களின் வாழ்வும் காட்டப்படுகிறது. சைனீஸின் வாழ்வோடு கலந்த அல்டிமேட் காமெடிகள், எல்ஜிபிடி மீதான ரிச்சர்டின் தாமதமான புரிதல் என ஒரு ஜனரஞ்சகமான அதேவேளையில் நுண்ணுணர்வுகளுக்கு இடம் தந்திருக்கிறது திரைக்கதை.
வானொலியில் தென்கச்சி சாமிநாதனின் கதைப்பேச்சு, படம் பார்ப்பதற்கு டெக் (அந்த காலத்து டிவிடி ப்ளேயர்), பள்ளியில் சொல்லக் கூடாத வார்த்தைகளை சொன்னால் அதை வாபஸ் வாங்குவது என 90ஸ் கிட்ஸின் மெமரிகளை பிடித்துள்ளார்கள். ‘ஏ.ஆர்.ரஹ்மான் பகலுக்கு போயிட்டாரு. ஆனா இவனுங்க அவர பாத்து இன்னும் நைட்லயே மியூசிக் போட்டுட்டு இருக்கானுங்க’ எனும் சைனீஸ் சொல்வது வேறலெவல்.
கலரிஸ்ட் நவீன் சபாபதியின் கைவண்ணத்தில், காலங்கள் எனும் அழியாத வண்ண கோலங்களை பிரதிபலிக்கும் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, இரண்டரை மணி நேரத்தில் அவ்வளவு பேரின் வாழ்க்கையை போரடிக்காமல் தொகுத்துள்ள ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங், கதையில் இருந்து விலகாத தாமரை, கீர்த்தி, காபர் வாசுகி பாடல் வரிகள் அனைத்துமே பாராட்டப்படக் கூடியவை.
குறிப்பாக இப்படத்தில் இரண்டாவது லேயராக M.R.ராஜகிருஷ்ணனின் ஒலி வடிவமைப்பு தரும் அனுபவம் அலாதியானது. 90களில் சென்னை ஸ்பென்சர் பிளாஸா, வாக்மேன், அந்த கால டெக் (டிவிடி பிளேயர்) என அந்த காலத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்வதில் கலை இயக்குநர் வாசுதேவனின் உழைப்பு தெரிகிறது.
வினோத் - ரேகாவின் காதலும், காதலில் ஏற்படும் சண்டையும் வழக்கமானதாக இருந்தாலும், கிளீஷேவாக இல்லாமல் ரசிக்கும்படியாக எதார்த்தமாக இருந்தது சிறப்பு.
தர்புகா சிவாவின் பின்னணி இசை கதையுடன் சேர்ந்து பயணிப்பது போல், பாடல்கள் நினைவில் வைத்து முணுமுணுக்கும்படி இருந்திருக்கலாம். எல்ஜிபிடி குறித்த ரிச்சர்டின் புரிதலுக்கான அழுத்தமான காரணங்கள் இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது. கேமியோ ரோலில் வரும் தர்புகா சிவா, அனைவரியும் தனித்தனியாக சந்தித்தாக சொன்னாலும், அவரை எங்கேயோ பார்த்தது போல் வினோத்க்கு மட்டுமே தோன்றுவதையும், மற்றவர்களுக்கு அவர் யாரென்றே தெரியாமல் இருப்பதையும் கவனித்திருக்கலாம். வினோத்க்கு தர்புகா சிவாவை ஏன் மறக்கிறது என்பதற்கும் லாஜிக் இல்லை. பள்ளி காலங்களில் மிகவும் சுதந்திரமாக இருக்கும் அனைவரின் குடும்ப பின்னணியும் காட்டியிருக்கலாம்.
நடிகர்களை பொருத்தவரை எதார்த்தமான நடிப்புடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் ஸ்கெட்ச், உடல்மொழி, வசன உச்சரிப்பு என தனித்தனியே கவனிக்கை வைக்கின்றனர். பள்ளிகால கேத்ரினின் வித்தியாசமான கேரக்டர் ஸ்கெட்ச், சைனீஸின் உடல்மொழி உள்ளிட்டவற்றை தனியே குறிப்பிடலாம். கேமியோ ரோலில் வரும் தர்புகா சிவாவின் எண்ட்ரி ஒரு செம சர்ப்ரைஸ். தொய்வாகத் தொடங்கும் இரண்டாம் பாதியின் நூலை கையில் பிடித்திருந்திருக்கிறார்.