அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மாஃபியா'. லைக்கா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படத்தை கார்த்திக் நரேன் எழுதி இயக்கியுள்ளார்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினராக அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர் அண்ட் கோ பலம் பொருந்திய டிரக் (Drug) மாஃபியா தலைவரான பிரசன்னாவை பிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகளும் அதன் விளைவுகளுமே மாஃபியா படத்தின் கதை.
அருண் விஜய்க்காகவே அளவெடுத்து தைத்தது போன்ற ஸ்டைலீஷான போலீஸ் வேடம். கெத்தாக நடந்து வரும் இன்ட்ரோ சீனில் இருந்தே அப்ளாஸ் அள்ளுகிறார். அவருக்கு சரி நிகராக வில்லன் வேடம் பிரசன்னாவிற்கு. கோபத்தைக் கூட நிதானமாக காட்டுவது மற்றும் வித்தியாசமான மேனரிசம் என கவர்கிறார்.
வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் முக்கியமான வேடம் பிரியா பவானி ஷங்கருக்கு. பரத், தலைவாசல் விஜய் என பிற நடிகர்களும் படத்துக்கு பெரும் துணை புரிந்திருக்கிறார்கள்.
கேரக்டர்கள் அறிமுகம், அது சார்ந்த காட்சிகள் என படம் மெதுவாகவே கதைக்குள் செல்கிறது. அருண் விஜய் மற்றும் பிரசன்னாவின் கதாப்பாத்திரங்களின் செயல்களும் இருவரின் எதிர்வினைகளும் என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.
பிரசன்னாவின் அறிமுகத்துக்கு பிறகே படம் சூடு பிடிக்கிறது. "நீ என்ன பண்ணுவனு தெரிஞ்சிக்க, நான் உன்ன மாதிரி யோசிச்சேன். நீ என்ன மாதிரி யோசிச்சா நான் பண்ணத உன்னால் கண்டுபிடிக்க முடியும்" என்பது போன்ற வசனங்கள் படத்தை ஆங்காங்கே சுவாரஸியப்படுத்துகின்றன.
ஹேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை காட்சிகளின் வீரியத்தை அதிகரித்திருக்கிறது. நேர்த்தியான ஒளிப்பதிவால் கவனம் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய். குறிப்பாக துப்பாக்கி சூடு நடைபெறும் காட்சியில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது அவரது கேமரா.
பிரசன்னாவின் பின்னணியை வெறும் வசனமாக இல்லாமல் காட்சிகளாக விளக்கியிருந்தால் அவரது கதாப்பாத்திரம் கூடுதல் அழுத்தமாக இருந்திருக்கும். கிளைமேக்ஸில் வரும் அந்த ட்விஸ்ட் அருண் விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.