மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படமான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்தான் மாறா. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் திலிப் குமார் இயக்கியுள்ள இப்படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது.
நாயகி ஷ்ரதா வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை புடிக்காமல், கேரளாவிற்கு செல்கிறார். அங்கு அவர் தங்கும் இடத்தில், சிறுவயதில் கேட்ட கதைகள் ஓவியமாக இருப்பதை பார்க்கிறார். மேலும் மாதவன் முன்பு தங்கியிருந்த வீட்டில் அவர் தங்க, அந்த உண்மை கதையும் சஸ்பென்ஸாக பாதியில் நிற்க, அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க மாதவனை தேட துவங்குகிறார்.
மாதவன் குறித்து செவி வழி மட்டுமே விவரமறிந்த ஷ்ரதா, அவர் சம்பந்தப்பட்ட ஆட்களை சந்தித்து பேச, அதன் மூலமாகவே மாதவன் மீது காதலும் கொள்கிறார். இப்படி ஷ்ரதாவின் தேடுதல் படலம் தொடர, அவர் மாதவனை சந்தித்தாரா, அவர்கள் காதல் என்னவானது.? என்பதே மாறா படத்தின் மீதி கதை.
மாறா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மாதவன். தனது நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி இக்கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார். துல்கர் சல்மானை இமிடேட் செய்யாமல், தனது தனித்துவத்தை காட்டியதில் லைக்ஸ் அள்ளுகிறார். ஷ்ரதா ஶ்ரீநாத்துக்கு பலமான கேரக்டர். அதை தனது சின்ன சின்ன உணர்ச்சிகள் மூலமாக அவர் வெளிப்படுத்திய விதம் நம்மை கவர்கிறது.
படத்தின் மற்றுமொரு பலம் கதையை தாங்கி நிற்கும் துணை நடிகர்கள்தான். எம்.எஸ்.பாஸ்கர், கிஷோர், மவுலி, அபிராமி என மாறா படத்திற்கு கணம் கூட்டுகின்றனர் இவர்கள். ஸ்டான்ட் அப் காமெடியன் அலெக்ஸ் தனது நகைச்சுவையால் கவர்ந்து கவனிக்கவும் வைக்கிறார்.
மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்த சார்லி படத்தை ரிமேக் செய்யும் போது, அதற்கேற்ப சில மாற்றங்களை திரைக்கதையில் கொண்டு வந்திருப்பதில் இயக்குநர் திலீப் குமார் ஸ்கோர் செய்கிறார். மேலும் நடிகர்களின் தேர்வு, படமாக்கப்பட்ட விதத்திலும் அறிமுகத்திலேயே நம்பிக்கை கொடுக்கிறார்.
தினேக் கிருஷ்ணன் - கார்த்திக் முத்துகுமார் ஆகியோரின் ஒளிப்பதிவு, கதைக்களத்தின் அழகினை ஃப்ரேம்களாக மாற்றி அசத்துகிறது. ஜிப்ரானின் இசையும் காட்சிகளுக்கு ஏற்ப ரம்மியமாக அமைந்துள்ளது. மேலும் கலை இயக்குநர் அஜயன், சின்ன சின்ன பொருட்களிலும் ஓவியங்களிலும் நேர்த்தி காட்டி பாராட்டுக்களை வாங்குகிறது.
முதல்பாதியில் இயல்பாக நகரும் திரைக்கதை பார்வையாளர்களை கவர, இரண்டாம் பாதியில் குறையும் வேகம் லேசான தொய்வை ஏற்படுத்துகிறது. மேலும் படம் நெடுகிலும் தொடர்ந்து வந்த எமோஷன்ஸை தாண்டி, க்ளைமாக்ஸ்-ல் அதை இன்னும் கனமாக காட்சிப்படுத்தியிருக்கலாம் என தோன்றுகிறது.