தோற்று போன அரசியல்வாதியான தந்தையை பார்த்து அரசியலில் வெற்றி பெற துடிக்கும் இளைஞனின் கதை. லால்குடி கருப்பையா காந்தி என்கிற எல்கேஜியாக ஆர்ஜே பாலாஜி. படம் முழுக்க அவர் ஆதிக்கம் தான்.
முதல்பாதி முழுவதும் வார்டு கவுன்சிலராக தன்னை பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் செய்யும் நடவடிக்கைகள் எல்லாமே நன்றாக சிரிப்பை வரவழைக்கின்றன.
பின் பாதியில் இயலாமை, தோல்வி பயம், கோபம் என தனது சீரியஸான மற்றொரு முகத்தையும் அவர் காட்டுகிறார்.
அவரது தந்தையாக நாஞ்சில் சம்பத். நிஜ வாழ்வில் அரசியல் பேச்சாளராக இருந்த அவருக்கு அதனை பிரதிபலிக்கும் வேடம். அது அவருக்கு சரியாக பொறுந்தியிருக்கிறது.
வழக்கமான ஹீரோயின் போல் அல்லாமல், கதையின் போக்கை மாற்றும் முக்கிய வேடம் பிரியா ஆனந்துக்கு. அதனை அழகாக செய்திருக்கிறார்.
கடந்த இரண்டரை வருடங்களாக தமிழக அரசியல் நிகழ்ந்தவைகளை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவே படத்தை ஆங்காங்கே சுவாரஸியப்படுத்துகின்றன.
மேலும் ஒளிப்பதிவும், இசையும் அரசியல் காமெடி படத்துக்கு தேவையானதை நிறைவாக செய்திருக்கின்றன.
தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதை இந்த படம் நமக்கு உணர்த்துகிறது.
ஒன்றுக்கு மேல் ஒன்றென அவர் சொல்லி வைத்தாற்போல ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நகர்வுகள் அமைவது, பிரச்சனைகள் வந்தாலும் அதனை அவர் எளிதாகக் கடப்பது என காட்சிகளில் நம்பகத்தன்மை குறைந்தாலும், வசனங்கள் மற்றும் சுவாரஸியமான திரைக்கதையால் அதனை வேகமாக கடக்கிறோம்.
படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு பலம் வாய்ந்த எதிரியாக காட்டப்படும் ஜேகே ரித்தீஷும் ஒரு கட்டத்துக்கு மேல் காமெடி செய்யப்படுகிறார். இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும் ஆங்காங்கே வரும் சுவாரஸியமான காட்சிகளால் படம் நிறைவான உணர்வைத் தருகிறது.