வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி நேரடியாக தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் 'குட்டி ஸ்டோரி'. முன்னணி இயக்குநர்களான கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளனர். விஜய் சேதுபதி, அதிதி பாலன், வருண், சாக்ஷி அகர்வால், சங்கீதா, அமலா பால், ரோபோ ஷங்கர், மேகா ஆகாஷ், அமிதாஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதலும் அன்பும் இந்த சமூகத்தில் இருக்கும் பலவாறான மனிதர்களிடையே ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதற்குள் இருக்கும் சந்தோஷங்களையும் சிக்கல்களையும் நான்கு வெவ்வேறு கதைகளாக தொகுத்து வழங்கும் ஆந்தாலஜி லவ் ஸ்டோரிதான் இந்த குட்டி ஸ்டோரி. எதிர்பாரா முத்தம், அவனும் நானும், லோகம், ஆடல் - பாடல் என நான்கு கதைகளும் தனித்தனியே நமக்கு இதில் சொல்லப்படுகிறது.
கவுதம் மேனனின் இளமை ததும்பும் பகுதியுடன் ஆரம்பிக்கும் 'எதிர்பாரா முத்தம்' பக்காவான ஓப்பனிங்காக அமைகிறது. வேறொரு பெண்ணை காதலித்து வரும் ஆதியும் - மிர்ணாளினியும் கல்லூரி நண்பர்கள். இந்த நட்புக்கிடையில் ஒரு எதிர்பாரா சம்பவம் நடக்க, அதன்பிறகு நடந்த சம்பவங்களும், இருவரின் வாழ்க்கை பயணங்களும் என்னவானது என்பதை வழக்கமாக தனது படங்களில் தென்படும் காப்பு, காபி ஷாப், என்ஜினியரிங் காலேஜ் உள்ளிட்ட ட்ரேட்மார்க் விஷயங்களோடு சொல்லியிருக்கிறார் கவுதம் மேனன். ஆதியாக கவுதம் மேனன் கதையின் நாயகனாக கச்சிதம் காட்டுகிறார். இளம் ஆதியாக வரும் வினோத் கிஷனும், அமலா பாலும் கூடுதல் அழகு சேர்க்கிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் வெறும் நண்பர்களாக மட்டுமே அன்பு செலுத்தி கொண்டிருக்க முடியுமா.? இந்த சமூகம் அவர்களை என்னவாக புரிந்து வைத்து கொண்டிருக்கிறது.? என்பதை மென் உணர்வுடன் நிதானமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். படத்தின் கடையில் வரும் நீண்ட ஷாட்க்காகவே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமாஹன்ஸாவை பாராட்டியாக வேண்டும். சிறிய பகுதியாக இருப்பினும், அதை முடிந்தளவுக்கு உயிர்ப்புடன் காட்ட முழு உழைப்பை கொடுத்திருக்கிறது படத்தின் டெக்னிக்கல் டீம்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'அவனும் நானும்'. மேகா அகாஷும் அமிதாஷும் காதலர்களாக பழகி வர, மேகா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. வீட்டிற்கோ மற்றவர்களுக்கோ தெரியாமல் இந்த குழந்தையை கலைப்பதா சுமப்பதா என்ற குழப்பத்தில் மூழ்கும் அவர், அதன் பின்னர் எடுத்த முடிவுகளும்., அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களுமே இப்பகுதியின் கதை. ஃபீல் குட் படங்களை பக்காவாக கொடுத்து அசத்தும் ஏ.எல்.விஜய் இயக்கம் என்பதே இப்பகுதியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் பெரிதான சுவாரஸ்யங்களை விடுத்து, ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை லேசான தொய்வை ஏற்படுத்திவிடுகிறது. மேகா ஆகாஷுக்கு கனமாக கதாபாத்திரம். அதை உள்வாங்கி நடித்திருக்கிறார். முழு நீள திரைப்படத்திற்கான கதையை சிறு பகுதியாக கொடுக்க முயற்சித்திருப்பது, நிகழும் கால மாற்றங்களில் நம்மை ஒன்றவிடாமல் செய்வது வருத்தம்.
அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் 'லோகம்'. கேம் ப்ரியர்களான ஆடம் மற்றும் ஈவ் இருவரும் லோகம் என்ற வீடியோ கேமுக்குள் பழகுகிறார்கள். இந்த முகமறியா காதல் கதையில் ஒரு எதிர்பாரா திருப்பம் உண்டாக, அதன் பின்னர் இருவருக்கும் என்ன ஆகிறது.? வீடியோ கேம் தாண்டி அவர்களின் வாழ்க்கையை காதல் ஒன்றிணைக்கிறதா..? என்பதே லோகம் பகுதியின் மீதிக்கதை. காதலை கருவாகக் கொண்டு அமைந்திருக்கும் இப்பகுதியில், வீடியோ கேம் மூலம் வித்தியாசம் காட்டி லைக்ஸ் அள்ளுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. கேம் ப்ரியர்களுக்கும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளசுகளுக்கும் பிடிக்கும்படியான காட்சியமைப்புகள் கவர்கின்றன. கேமில் வரும் காட்சிகளை அழகாக வடிவமைத்திருக்கும் VFX மற்றும் கிராபிக்ஸ் டீம் கவனிக்க வைக்கிறது.
கடைசியாக நலன் குமாரசாமி இயக்கத்தில் 'ஆடல் - பாடல்'. விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் ஆகியோரின் நடிப்பில் இப்பகுதியை படமாக்கி இருக்கிறார்கள். வேறு ஒரு பெண்ணுடன் விஜய் சேதுபதி தொடர்பில் இருப்பது, அவரது மனைவியாக வரும் அதிதி பாலனுக்கு தெரிய வருகிறது. இதை தொடர்ந்து இன்னும் ஓர் அதிர்ச்சியான விஷயம் விஜய் சேதுபதிக்கு தெரிய வருகிறது. அடுத்தடுத்த அதிர்ச்சியைக் கடந்து, அவர்களின் உறவு என்னவாகிறது.? காதல் என்பது அவர்களுக்குள் என்னவாக இருக்கிறது.? என்பதே இப்பகுதியின் மீதிக்கதை. குறும்படங்களின் மூலம் பயிற்சியடைந்த நலன் குமாரசாமி ஒரே வீட்டுக்குள் மொத்த கதையை நகர்த்தி அசத்தலான ஃபினிஷிங் கொடுக்கிறார். சென்சிட்டிவாக அணுக வேண்டிய இடங்களை தனது கதை சொல்லும் விதம் மூலமாக நமக்குள் நெருங்க வைத்து நேர்த்தி காட்டுகிறார் நலன். எப்போதும் போலவே தனது பாத்திரத்தை செவ்வென செய்து அசால்ட் செய்கிறார் விஜய் சேதுபதி. 'அருவி' அதிதி பாலன் அடர்த்தியான நடிப்பில் கனம் கூட்டுகிறார். எட்வின் லூயிஸின் பின்னணி இசை இப்பகுதிக்கு நிச்சயம் மற்றுமொரு பலமே. எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படவிடாமல் கதை நகர இவரின் இசை பெரிதும் உதவுகிறது. க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்னர் அதிதி பாலன் பேசும் அந்த ஒற்றை வசனம்.. பளீச்.
அடுத்தடுத்த ஆந்தாலஜி கதையம்சம் கொண்ட படங்களை பார்த்து பழக்கப்பட்டு வரும் நமது பார்வையாளர்களுக்கு நிச்சயம் 'குட்டி ஸ்டோரி'யை ஒரு ஃபீல்குட் காதல் ட்ராமாவாக கருதலாம். ஆங்காங்கே சறுக்கல்களை கொடுக்கும் சில இடங்களை இன்னும் கொஞ்சம் சரி செய்திருந்தால், கண்டிப்பாக குட்டி ஸ்டோரியை உச்சி முகர்ந்து கொண்டாடியிருக்கலாம்.!