நல்லுசாமி பிச்சர்ஸ் தாய்சரவணன் தயாரிப்பில் இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் மற்றும் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து டி.இமான் இசையமைத்து சுசீந்திரன் எண்ணம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ‘கென்னடி கிளப்’.
கபடி விளையாட்டை உயிராக நினைக்கும் கிராமத்துப் பெண்களுக்கு சசிகுமார் எப்படி பயிற்சி கொடுத்து கபடி விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை மீறி அந்த பெண்களைத் தேசிய அளவிலான கபடிப் போட்டியில் கலந்து கொள்ள வைக்கிறார். அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதைச் சுவாரசியமாகச் சொல்லி இருக்கும் படமே கென்னடி கிளப்.
சசிகுமார் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நமது மனங்களில் இடம்பிடிக்கிறார். தனது அணிக்காக சசிகுமார் தனது வேலையை தூக்கி எறியும் செயல் படம் பார்க்கும் நம்மை ரசிக்க வைக்கிறது.
பாண்டியநாடு படத்தில் பார்த்த பாராதிராஜா இதில் கொஞ்சம் மிஸ்ஸிங், பாரதிராஜா படம் முழுவதும் வந்தாலும் அவர் கதாபாத்திரதில் மேலும் வலிமை சேர்த்து இருக்கலாம் . படத்தில் ஹீரோயின் என்று யாருமில்லை, கபடி வீராங்கனைகளாக நடித்த அனைவருமே ஹீரோயின்தான். படத்தில் நிறைய புது முகங்கள் இருந்தாலும் அனைவருமே சிறப்பாக நடித்து இருக்கின்றனர் என்றே சொல்லவேண்டும்.
ஒளிப்பதிவாளர் குருதேவ் தனது பணியைச் சிறப்பாகச் செய்து இருக்கிறார். கபடி காட்சிகளை மிக தத்ரூபமாகப் படம் பிடித்து இருக்கிறார்.
எப்படியும் இந்த மாதிரி ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே கிளைமேக்ஸில் ஆடியன்ஸை, சீட்டின் நுனிக்கு வர வைப்பார்கள், இந்த படத்தில் ஆரம்பத்திலிருந்து பெரிதும் அப்படி எந்த காட்சி இல்லை என்றாலும், கிளைமேக்ஸில் கண்டிப்பாக அனைவரும் சீட்டின் நுனிக்கு வருவது உறுதி.
டி.இமான் பின்னணி இசையில் கலக்கியுள்ளார், படத்தில் 'கபடி கபடி' பாடல் படத்தின் விளையாட்டு காட்சிகளுக்கு நல்ல வேகத்தை கூட்டுகிறது
மிக எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை என்பதால், இது தான் நடக்கப்போகிறது என முன்னரே தெரிந்துவிடுகிறது. ஏற்கனவே வெளிவந்த பல விளையாட்டு படங்களின் பாதிப்பு கென்னடி கிளப்பில் நிறையவே தெரிகிறது. வில்லன் கதாபாத்திரமும், சசிகுமாருடன் அவருக்கான மோதலும் கிட்டத்தட்ட சமீபத்திய விளையாட்டு படங்களை நினைவுப்படுத்துகிறது. மாவட்ட கபடி போட்டியில் தஞ்சாவூர் அணிக்கு செம பில்டப் கொடுத்துவிட்டு, அந்த அணியின் கோச்சாக சூரியை கொஸ்ட் ரோல் செய்த காமெடி காட்சிகள் எல்லாம் எடுபடவில்லை.
இயக்குனர் சுசீந்திரன் கபடி போட்டி ஆரம்பித்த கதையில் தொடங்கி அது வளர்ந்து தற்போது எப்படி ஒரு விளையாட்டு அரசியலாக மாறியுள்ளது, இதன் பின் எப்படி பணம் விளையாடுகின்றது என்பதை தெளிவாக காட்டியுள்ளார்.தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழுவில் உள்ளூர் கபடியை காட்டிய சுசீந்திரன், கென்னடி கிளப்பில் தேசிய அளவிலான கபடி போட்டிகளை காண்பித்து சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார்.